2025ஆம் ஆண்டின் பொங்கலுக்கு வெளியீடாக இருந்த அஜித் நடித்த ‘விடாமுயற்சி’ படம் தள்ளிப் போனதால், தற்போது பத்து படங்களுக்கு மேல் பொங்கல் போ. இப்போது பொங்கல் வெளியீடாக பல படங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் உள்ள 1000 தியேட்டர்களில் எப்படி இவை அனைத்துக்கும் இடம் கிடைக்கும் என்பது கேள்விக்குறியாக உள்ளது. எந்தப் படம் வெளியீடு காணும், எந்தப் படம் தள்ளிப் போகும் என்பதை அடுத்த சில நாட்களில் தெரிந்துகொள்ள முடியும்.
இந்தப் போட்டியில் தற்போது புதிதாக ‘மத கஜ ராஜா’ எனும் படம் இணைந்துள்ளது. சுந்தர் சி இயக்கத்தில் உருவான இந்த படத்தில் விஷால், வரலட்சுமி சரத்குமார், அஞ்சலி, சந்தானம் மற்றும் பலர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இந்தப் படத்திற்கு இசை அமைத்தவர் விஜய் ஆண்டனி. 2012ஆம் ஆண்டு தொடங்கிய இந்தப் படம் 2013ஆம் ஆண்டிலேயே தயாரிப்புப் பணிகளை முடித்துவிட்டது.
2013 ஆம் ஆண்டு பொங்கலுக்கு வெளியிடுவதாக அறிவிக்கப்பட்டாலும், அப்போது விஷால் நடித்த மற்றொரு படம் ‘சமர்’ வெளிவந்ததால், ‘மத கஜ ராஜா’ வெளியீடு தள்ளிப் போனது. அதன் பிறகு, 2013ஆம் ஆண்டின் குடியரசு தினத்தில் வெளியிட திட்டமிட்டனர்.
ஆனால், இந்தப் படத்தை தயாரித்த ஜெமினி பிலிம் சர்க்யூட் நிறுவனம் மணிரத்னத்தின் ‘கடல்’ படத்தை 2013 பிப்ரவரி 1ஆம் தேதி வெளியிட்டது. ‘கடல்’ மிகப்பெரிய தோல்வியை சந்தித்ததால், அந்த நஷ்டத்தை ‘மத கஜ ராஜா’ வெளியீட்டின் மூலம் சரி செய்ய வேண்டும் என்று விநியோகஸ்தர்கள் கோரிக்கை வைத்தனர். இதனால், அடுத்ததாக செப்டம்பர் மாதத்தில் வெளியிடுவதற்கு திட்டமிட்டனர்.
அதனை தொடர்ந்து பல்வேறு வழக்குகள் மற்றும் பிரச்னைகள் காரணமாக படம் மீண்டும் மீண்டும் தள்ளிப் போனது. தற்போது, 12 ஆண்டுகள் கழித்து, இந்த பொங்கலுக்கு ‘மத கஜ ராஜா’ வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த முறையாவது படம் வெளியாகுமா என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.