அபின் ஹரிஹரன் இயக்கத்தில், ஆதித்யா மாதவன், கவுரி கிஷன், அஞ்சு குரியன் ஆகியோர் நடித்துள்ள ‘அதர்ஸ்’ திரைப்படம் இன்று முதல் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சென்னையில் கடந்த வாரம் நடைபெற்ற பட விழாவில், ஆதித்யா மாதவனிடம் “பாடல் காட்சியில் கதாநாயகி கவுரி கிஷனை தூக்கி ஆடினீர்களே… அவர் வெயிட்டாக இருந்தாரா? எவ்வளவு எடை இருந்தார்?” என்று ஒரு வேடிக்கையான கேள்வி எழுப்பப்பட்டது. இதனை தொடர்ந்து, யூடியூப் சேனல் பேட்டியில் பேசிய கவுரி கிஷன், அந்த கேள்வியை கடுமையாக விமர்சித்திருந்தார்.

இதற்கிடையில், நேற்று நடைபெற்ற ‘அதர்ஸ்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் இதுகுறித்து கேட்கப்பட்ட போது, கவுரி கிஷன் கூறியதாவது — “இப்படிப்பட்ட கேள்விகள் முற்றிலும் அபத்தமானவை. இது டைரக்டரின் தேர்வு. நீங்கள் யார் இப்படிப்பட்ட கேள்வி கேட்க? என் உடல் எடை பற்றி கதாநாயகனிடம் கேட்பது உருவக்கேலி செய்வது போலத்தான். என் எடையை தெரிந்துகொண்டு என்ன செய்யப் போகிறீர்கள்?” என ஆவேசமாக பதிலளித்தார். இதனால், பத்திரிகையாளர்களுக்கும் அவருக்கும் இடையே சிறிய வாக்குவாதம் ஏற்பட்டது.
யூடியூபரின் கேள்வி சமூக ஊடகங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளானது. இதற்கிடையில், தமக்காக ஆதரவு தெரிவித்த ரசிகர்கள் மற்றும் சக நடிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார் கவுரி கிஷன். மேலும், பத்திரிகையாளர் சந்திப்பில் துணிச்சலாகக் கேள்வி எழுப்பியதற்காக நடிகை குஷ்பு, கவுரி கிஷனை பாராட்டியுள்ளார்.
அதே நேரத்தில், தென்னிந்திய நடிகர் சங்கம் அந்த யூடியூபரின் நடத்தைக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, மலையாள நடிகர் சங்கமும் அதே யூடியூபருக்கு எதிராக கடுமையான கண்டனத்தை வெளியிட்டுள்ளது. அதில், “நடிகை கவுரியின் வலியை நாங்கள் உணர்கிறோம். எப்போது, எங்கே, யார் செய்தாலும் பாடி சேமிங் தவறானது என்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம். உடல் அவமதிப்பு ஒரு மனிதரின் மனநிலையை பாதிக்கும் செயல் என்பதால், இதுபோன்ற செயல்களை கடுமையாக கண்டிக்கிறோம். அனைவரும் ஒருவருக்கொருவர் மரியாதையுடன் நடந்து கொள்ள வேண்டிய பொறுப்பு உண்டு என்பதை நினைவில் கொள்ளுங்கள்” என தெரிவித்துள்ளனர்.

