சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த், வித்யுத் ஜம்வால், விக்ராந்த் உள்ளிட்டவர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வரும் எஸ்கே 23 படத்தை ஏஆர் முருகதாஸ் இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை, பாண்டிச்சேரி ஆகிய இடங்களில் நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில், இந்த படத்தில் வில்லனாக நடிக்கும் பிரபல பாலிவுட் நடிகர் வித்யுத் ஜம்வால் தனது கதாபாத்திரம் பற்றி சமீபத்திய பேட்டியில் பேசினார்.
முன்னதாக விஜய் – ஏஆர் முருகதாஸ் கூட்டணியில் வெளியான துப்பாக்கி படத்தில் அதிரடியான நடிப்புடன் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருந்த வித்யுத், தற்போது நீண்ட காலங்களுக்கு பிறகு ஏஆர் முருகதாசுடன் மீண்டும் இணைந்துள்ளார். துப்பாக்கி படத்தில் செய்திருந்த அதே மாதிரியான அதிரடி காட்சிகளை மீண்டும் இந்த படத்தில் உருவாக்க வேண்டும் என்று ஏஆர் முருகதாஸ் கேட்டதாக வித்யுத் உற்சாகமாக கூறியுள்ளார்.
இந்த கூட்டணி குறித்து வித்யுத் தன்னுடைய மகிழ்ச்சியை சமீபத்திய பேட்டியில் வெளிப்படுத்தியுள்ளார். கதாநாயகனை மட்டுமில்லாமல் வில்லனையும் மிரட்டலாக காட்டும் இயக்குநர்களில் ஏஆர் முருகதாஸ் முன்னணி என்று அவர் பாராட்டியுள்ளார். எஸ்கே 23 படத்தின் கதையை ஏஆர் முருகதாஸ் கூறியபோது, துப்பாக்கி படத்தில் செய்த அதே மேஜிக்கை மீண்டும் இந்த படத்தில் செய்ய வேண்டுமென்று கேட்டதாகவும், வித்யுத் தனது பேட்டியில் குறிப்பிட்டுள்ளார்.
சிவகார்த்திகேயனின் எஸ்கே 23 படத்தின் கதை தனது மிகப்பெரிய அளவிலான ஈர்ப்பை உண்டாக்கியது என்றும், தமிழக மக்கள் எப்போதும் தன்னிடம் காட்டும் அன்பு தனக்கு மிகவும் பிடித்தமானது என்றும் வித்யுத் தெரிவித்துள்ளார். சென்னை சூட்டிங்கில் சிவகார்த்திகேயன் மற்றும் வித்யுத் இடையிலான மிகப்பெரிய ஆக்ஷன் காட்சிகள் படமாக்கப்பட்டிருந்தன. இந்த படத்திலும் ஆக்ஷன் காட்சிகள் அதிகமாக இருக்கும் என்று படக்குழு சார்பில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.