அதர்வாவின் தம்பி ஆகாஷ் முரளி மற்றும் அதிதி ஷங்கரை முன்னணி கதாபாத்திரமாக கொண்டு நேசிப்பாயா படத்தை இயக்கியுள்ளார் பில்லா இயக்குநர் விஷ்ணுவர்தன். நேற்று இரவு இந்த படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சிறப்பாக நடந்தது. விழாவில் சிவகார்த்திகேயன், விஜய் ஆண்டனி உள்ளிட்ட பல பிரபலங்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
ஆகாஷ் முரளி, மாஸ்டர் படத்தை தயாரித்த சேவியர் பிரிட்டோவின் மகளை திருமணம் செய்துகொண்டார். தனது மருமகனை ஹீரோவாக மாற்றும் நோக்கில், சேவியர் பிரிட்டோ, மாஸ்டர் பட வெற்றிக்கு பின், பெரிய பொருட்செலவில் விஷ்ணுவர்தனை வைத்து நேசிப்பாயா படத்தை தயாரித்துள்ளார்.
விழாவில் பேசும் போது, சிவகார்த்திகேயன், “எனக்கு பொண்ணு கொடுத்ததே பெரிய விஷயம். பெரிய சம்பளமோ வேலைவாய்ப்போ இல்லாத எனக்கு என் தாய்மாமன் நம்பி தனது மகளை திருமணம் செய்துவைத்தார். அதேபோல உங்களுக்கும் நல்ல மாமனார் கிடைத்திருக்கிறார். அவர் பொண்ணையும் கொடுத்து படத்தையும் கொடுத்திருக்கிறார்” என்று கூறினார்.
மேலும், சிவகார்த்திகேயன் தனது ஆரம்ப காலங்களை நினைத்து, “விஜய் டிவியில் ஒரு நிகழ்ச்சிக்கு எனக்கு 4500 ரூபாய் தான் சம்பளம் கொடுத்தார்கள். ஆனால் இப்போது விஜய் டிவி வளர்ந்துள்ளது. பாலா போன்றவர்கள் லட்சக்கணக்கில் சம்பாதிக்கலாம் போலத் தெரிகிறது. லட்சக்கணக்கில் சம்பாதிக்கவில்லை என்றாலும், மாப்பிள்ளை தனது கனவை நோக்கி ஓடுகிறார்” என கூறி, தனது மனைவிக்கும் மாமாவுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.