சிவகார்த்திகேயன் மற்றும் சாய் பல்லவி நடிப்பில் தீபாவளிக்கு வெளியான திரைப்படம் ‘அமரன்’. இந்த படம் அக்டோபர் 31ஆம் தேதி வெளியானது. சோனி பிக்சர்ஸ் மற்றும் கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனத்தின் கூட்டாண்மையில் தயாரிக்கப்பட்ட இப்படத்தை ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். இந்திய ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜனின் வாழ்க்கை வரலாற்றை மையமாக வைத்து இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளுடன் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் இப்படம் வெளியானது. தீபாவளி பண்டிகைக்கு, ஜெயம் ரவியின் ‘பிரதர்’ மற்றும் கவினின் ‘ப்ளடி பெக்கர்’ ஆகிய படங்களுடன் இப்படம் ரிலீஸானது. ‘அமரன்’ நேரடித் தமிழ் திரைப்படமாக இருந்ததன் காரணமாக தமிழ்நாட்டில் இதற்கு மிகுந்த வரவேற்பு இருந்தது. மேலும், படம் இந்திய ராணுவத்தை மையமாக கொண்டிருந்ததாலும் வெளிமாநிலங்களில் நல்ல ஆதரவு பெற்றது. இதனால், இந்த ஆண்டு தீபாவளியில் சிவகார்த்திகேயன் மிகப்பெரிய வெற்றி பெற்றார் என்று கூறப்படுகின்றது.
அதேவேளையில், வெளியான 19 நாட்களுக்குள், அதாவது நவம்பர் 18ஆம் தேதி வரை இப்படம் ரூ.295 கோடிகளில் இருந்து ரூ.300 கோடிகள் வரை வசூலித்துள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதில், இந்தியாவில் ரூ.200 கோடிகளும், வெளிநாடுகளில் ரூ.100 கோடிகளும் வசூலிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இப்படத்தின் ரூ.300 கோடி வசூல் சாதனை ரசிகர்கள் மற்றும் படக்குழுவை மகிழ்ச்சியடையச் செய்துள்ளது.