சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன், ரவி மோகன், அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கும் ஒரு புதிய திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படத்தை டான் பிக்சர்ஸ் தயாரிக்க, இசையமைப்பை ஜிவி பிரகாஷ் கையாள்கிறார். குறிப்பாக, இது சிவகார்த்திகேயனின் 25வது படமாகும். இந்த படத்தின் படப்பிடிப்பு தலைப்பு வைக்காமல் முன்னெடுக்கப்பட்ட நிலையில், தற்போது மறைந்த நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் முதல் ஹீரோ படமான பராசக்தி என்ற பெயரையே இந்தப் படத்திற்கும் சூட்டியுள்ளனர். இதற்காக, படக்குழு ஒரு அறிமுக வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
அறிமுக வீடியோவில், அச்சம் என்பது மடமையடா என்ற பாடல் பின்னணியில் ஒலிக்க, ஒன்ஸ் அபான் ஏ டைம் இன் மெட்ராஸ் எனும் வாசகம் வெளிப்படுகிறது. இது ஒரு கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் போராட்டம் எழும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளது. அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் மாணவர்களாக நடித்திருக்க, ரவி மோகன் வில்லனாக காணப்படுகிறார். இந்நிலையில், மாணவர்களின் எழுச்சியைக் கொண்டாடும் நாயகனாக சிவகார்த்திகேயன் முன்னிலைப்படுத்தப்படுகிறார்.
அவரது கதாபாத்திரம் மாணவர்களை நோக்கி, “சேனை ஒன்று தேவை, பெரும் சேனை ஒன்று தேவை!” என உறுதிமொழியுடன் பேசியிருக்கும் வசனங்களும் இந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளன. மேலும், “மாணவர்களை தொடாதீர்கள்!” என்ற முக்கியமான செய்தியையும் இதில் வலியுறுத்தியுள்ளனர். இதன் மூலம், படத்தின் கதை மாணவர்களின் போராட்டங்களை மையமாகக் கொண்ட எழுச்சி கதையாக அமையலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.