நடிகர் கமல்ஹாசன் மற்றும் இயக்குநர் மணிரத்னம் இணைந்து கூட்டணியில் உருவாகியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மெட்ராஸ் டாக்கீஸ், ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு இசையமைப்பாளராக ஏ.ஆர். ரகுமான் பணியாற்றியுள்ளார். இத்திரைப்படம் இன்று (ஜூன் 5) உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
தமிழ்நாடு அரசு, ‘தக் லைப்’ படத்தின் சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கியுள்ளது. அதன்படி, இன்று ஒரே நாளில், காலை 9 மணியில் இருந்து இரவு 2 மணி வரை மொத்தம் 5 காட்சிகள் திரையிடப்படும். இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியிடப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக சின்மயி பாடிய ‘முத்தமழை’ பாடல் ரசிகர்களிடம் பெரிதும் பரிசை பெற்றுள்ளது. அந்த வரவேற்பை தொடர்ந்து, ‘தக் லைப்’ இசை ஆல்பத்தில் 10-வது பாடலாக சின்மயி பாடிய வெர்ஷனை சேர்த்துள்ளனர்.