நடிகர் ரவி மோகன் தனது சொந்த பட நிறுவனம் ‛ரவிமோகன் ஸ்டூடியோஸ்’ என்ற பெயரில் இன்று தொடங்கியுள்ளார். இதற்கான துவக்க விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் நடிகர்கள் கார்த்தி, சிவகார்த்திகேயன், அதர்வா, நடிகைகள் ஜெனிலியா, ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் கன்னட நடிகர் சிவராஜ்குமார் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.

விழாவில் பேசுகையில் சிவகார்த்திகேயன் கூறியதாவது: “நான் கல்லூரியில் படிக்கும் நாட்களில் ரவி மோகன், ஜெனிலியா நடித்த படங்களை பார்த்து ரசித்து இருப்பேன். அவர்கள் இருவரும் மீண்டும் இணைந்து ஒரு படம் எடுக்க வேண்டும் என்பது எனது ஆசை. இப்போது ரவி மோகன் தயாரிப்பாளராகி விட்டார். உண்மையில், எனக்கும் நடிப்பதை விட தயாரிப்பில் ஈடுபடுவதில்தான் அதிக மகிழ்ச்சி. பல ஹீரோக்கள் தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க வேண்டும். திறமையானவர்களுக்கு களம் அமைத்துத் தர வேண்டும். அது ஒரு தாயின் பாசம் போன்ற உணர்ச்சியாக இருக்கும்.
தற்போது நான் ஒரு படத்தை தயாரித்து கொண்டிருக்கிறேன். அந்த படத்தை எடிட்டிங் செய்யும் போது பார்த்ததில் எனக்கு மிகுந்த மகிழ்ச்சி ஏற்பட்டது. தயாரிப்பு விஷயத்தில் நான் ரவி மோகனுக்கு சீனியர். எனக்குச் சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக இருக்கிறேன். அவர் தொடங்கியுள்ள இந்த நிறுவனத்தில் நடிக்கவும் தயார். அவர் இன்றே அட்வான்ஸ் கொடுத்தாலும் வாங்கிக்கொள்வேன். பராசக்தி படத்தில் ரவியுடன் இணைந்து நடிக்கிறேன். அவர் மிகவும் அதிகமாக பேசுவார். சுதா இயக்கும் அந்த ‛செட்’ தனித்துவமாக இருக்கும்” என தெரிவித்தார்.
மேலும், இவ்விழாவில் நடிகர் ரவி மோகன் தனது தாயாரை போற்றும் விதமாக ஒரு ஆல்பம் பாடலை உருவாக்கியிருந்தார். அதற்கான வரிகளை அவர் தானே எழுதியிருந்தார். அந்தப் பாடலை அவரின் தோழியும் பாடகியுமான கெனிஷா பாடியிருந்தார். விழாவில் கெனிஷா பேசுகையில், “ரவிமோகன் ஸ்டூடியோவில் நானும் ஒரு பங்காக இருப்பது பெருமையாக உள்ளது. ரவி எனக்கு ஒரு அண்ணனும், அவரது அம்மா எனக்கு ஒரு தாயுமான உறவுகளை அளித்திருக்கிறார். ரவி எத்தகைய சோகத்தில் இருந்தாலும் வெளியில் மகிழ்ச்சியாக இருப்பதைப் போலவே நடித்து கொள்கிறார். அவர் எப்போதும் கஷ்டத்தில் இருக்கும் மக்களுக்கு துணையாக இருப்பார். அவரை நான் கடவுளாகவே பார்க்கிறேன்” என்றார்.