ரஜினி முருகன் ரீ ரிலீஸ் குறித்து இயக்குனர் பொன்ராம் சமீபத்திய பேட்டி ஒன்றில் இப்படம் திரும்பவும் திரையரங்குகளில் வருவது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது. இதனை நாங்கள் பலமுறை சேனல்களிலும் OTT-யிலும் பார்த்திருப்போம். ஆனால், தியேட்டரில் பார்க்கும்போது அனுபவம் முற்றிலும் மாறுபடும். எல்லோரும் ஒரே இடத்தில் சேர்ந்து சிரிக்கும்போது, திரையரங்கமே கலகலப்பாக இருக்கும்.

இது எனக்கு ஒரு பெருமை. நான் இயக்குநர் ராஜேஷ் சாரிடம் உதவி இயக்குநராக வேலை செய்தபோதே, ‘ரஜினி முருகன்’ கதையை எழுதினேன். ஆனால், சில சூழல்களில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தை முதலில் இயக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த படத்தின் வெற்றி எனக்கு மேலும் உற்சாகத்தைக் கொடுத்தது. இதன் பிறகு தான் ‘ரஜினி முருகன்’ படத்தை இயக்கத் தொடங்கினேன்.”
‘ரஜினி முருகன்’ படத்தின் கதையின் மையப்புள்ளி தாத்தா தான். கதையில், தாத்தாவின் வாழ்க்கையிலேயே ஹீரோ. அவரைச் சுற்றியே ரஜினி முருகன் கதையும், அவருடைய குடும்ப உறவுகளும் உருவாகின்றன. படம் எடுக்கும்போது, ‘ரஜினி முருகன்’ என்று பெயர் வைத்தது, ஒரு அட்ராக்ஷனுக்காக தான்.நான் ரஜினி சாரின் பெரிய ரசிகன். அவரைப் போல் யாரையும் பின்பற்றாமல், தனக்கென்று ஒரு தனி ஸ்டைலை உருவாக்கியவர். நடிகர்களுக்கு மட்டுமல்ல, எங்கள் மாதிரி எந்த பின்னணியும் இல்லாத இயக்குநர்களுக்கும் அவர் மிகப்பெரிய இன்ஸ்பிரேஷன். நான் முதன்முதலில் தியேட்டரில் பார்த்த படம், ரஜினி சாரின் ‘படிக்காதவன்’ தான். அது எனக்கு மிகவும் பிடித்த படம். அதன் கிளைமாக்ஸ் காட்சிகள் இன்னமும் மனதில் நிற்கின்றன.

எல்லா இயக்குநர்களுக்கும் ஒரு கனவு இருக்கும் அது ரஜினி சாரை இயக்க வேண்டும் என்பதே! எனக்கும் அந்த கனவு இருந்தது. ஆனால், அந்த வாய்ப்பு இதுவரை அமையவில்லை. அதனால், நான் இயக்கும் படத்துக்கு கூட ரஜினி சாரின் பெயரை வைக்கலாம் என நினைத்தோம். ரஜினி சார் படம் வெளியாகும் போது பார்க்கவில்லை. அவரை சந்திக்க முயற்சியும்செய்தோம், ஆனால் அவர் ஷூட்டிங்கில் மிகவும் பிஸியாக இருந்தார். ஆனால், படம் ரிலீஸாகி 3 ஆண்டுகள் கழித்து, அவரை நேரில் சந்திக்க நேர்ந்தது. அப்போது அவருடைய பாணியில், ‘ரஜினி முருகன் நல்லாருந்துச்சு. உங்களுக்கு காமெடி செம்மையா வருதுல்ல!’ என்று பாராட்டினார். இது எனக்குச் சிறந்த தருணம். லேட்டா வந்தாலும், மறக்க முடியாத பாராட்டு அது.