“பருத்திவீரன்” திரைப்படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பிரியாமணி, அதன் பிறகு பல்வேறு படங்களில் கதாநாயகியாகவும் முக்கியமான கதாபாத்திரங்களிலும் நடித்தார். 2017ல் திருமணமான பிறகு, சில காலம் திரைப்படங்களில் நடிப்பதை குறைத்திருந்த இவர், 2021 முதல் மீண்டும் முழு தீவிரத்துடன் நடிக்கத் தொடங்கியுள்ளார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/1000157006.png)
அந்த வரிசையில், தெலுங்கில் “விராட பருவம்”, “கஸ்டடி”, ஹிந்தியில் “ஜவான்” ஆகிய திரைப்படங்களில் எதிர்மறை (நெகட்டிவ்) கதாபாத்திரங்களில் நடித்து வந்த பிரியாமணி, 2023ல் மலையாளத்தில் வெளியான, மோகன்லால்-ஜீத்து ஜோசப் கூட்டணியில் உருவான “நேர்” திரைப்படத்திலும், நெகட்டிவ் சாயல் கொண்ட வழக்கறிஞராக நடித்திருந்தார்.
![](https://touringtalkies.co/wp-content/uploads/2025/02/images-2025-02-10T152047.452.jpeg)
கடந்த ஆண்டு, ஹிந்தியில் அவர் நடித்த “ஆர்ட்டிகிள் 70” மற்றும் “மைதான்” போன்ற திரைப்படங்கள் வெளியாகின. இந்த நிலையில், 2025ல் அவர் நடித்த முதல் திரைப்படமாக, மலையாளத்தில் உருவான “ஆபிஸர் ஆன் டூட்டி” திரைப்படம் பிப்ரவரி 20ம் தேதி வெளியிடப்பட இருக்கிறது. அறிமுக இயக்குநர் ஜித்து அஷரப் இந்த படத்தை இயக்கியுள்ளார், கதாநாயகனாக குஞ்சாக்கோ கோபன் நடித்துள்ளார். ஒரு நகைக்கடை கொள்ளை சம்பவத்தின் பின்னணியில் உள்ள மர்மங்களை விசாரிக்கும் வகையில் உருவான இந்த திரைப்படம், ஒரு அதிரடி போலீஸ் கதையாக உருவாகியுள்ளது.