மலையாள சினிமாவில் ‘ரெட் ரெயின்’ என்ற திரில்லர் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராகுல் சதாசிவன். இவரது இயக்கத்தில் மம்முட்டி நடித்த ‘பிரமயுகம்’ திரைப்படம் 2024ஆம் ஆண்டு வெளியானபோது ஹாரர் வகையில் வித்தியாசமான அணுகுமுறையால் பாராட்டைப் பெற்றது. அந்தப்படத்தை தயாரித்த அதே நிறுவனம், மீண்டும் ராகுல் சதாசிவன் இயக்கத்தில் ‘டைஸ் ஐரே’ என்ற புதிய திரைப்படத்தை உருவாக்கியுள்ளது. இதில் மோகன்லாலின் மகன் பிரணவ் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அவருடன் சுஷ்மிதா பட், கிபின் கோபிநாத், ஜெயா குருப் மற்றும் அருண் அஜிகுமார் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு இசையமைத்துள்ளார் கிறிஸ்டோ சேவியர்.

‘டைஸ் ஐரே’ என்ற தலைப்பின் பொருள், “ஆன்மாக்கள் இறுதி நியாயத் தீர்ப்பில் சொர்க்கம் அல்லது நரகத்துக்குத் தீர்மானிக்கப்படும் அந்த கடைசி நாள்” என்பதாகும். ஒய் நாட் ஸ்டூடியோஸ் மற்றும் நைட் ஷிப்ட் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளன.
பிரணவ் மோகன்லால் எதிர்கொள்ளும் அமானுஷ்ய அனுபவங்களும் பேய்த் தன்மையுடனான மர்ம சம்பவங்களும் கதையின் மையமாக அமைந்துள்ள இப்படம், கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. திரைக்கதையின் சுவாரஸ்யம், நடிகர்களின் துல்லியமான நடிப்பு, தொழில்நுட்பத் தரம் ஆகியவை பார்வையாளர்களை கவர்ந்ததுடன், ஹாரர் காட்சிகள் ரசிகர்களுக்கு நிச்சயமான பயத்தைக் கொடுத்ததாக மதிப்பீடு செய்யப்படுகிறது. இப்படம் வெளியான ஒரே வாரத்தில் ரூ. 50 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்புக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

