சுந்தர் சி இயக்கத்தில், விஷால், அஞ்சலி, வரலட்சுமி, சந்தானம் மற்றும் பலர் நடித்த ‘மத கஜ ராஜா’ திரைப்படம் 12 ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்டது. பல்வேறு காரணங்களால் திரையரங்குகளில் வெளியீடு பலமுறை தள்ளிவைக்கப்பட்ட இந்த படம், கடந்த ஞாயிறன்று வெளியானது.
திரையரங்குகளில் முதல் காட்சியிலிருந்தே ரசிகர்கள் மிகுந்த வரவேற்பு அளித்தனர். முதல் நாள் வசூலை விட அடுத்த நாட்களில் இப்படத்தின் வசூல் தொடர்ந்து உயர்ந்தது. கடந்த ஐந்து நாட்களில் பாக்ஸ் ஆபீஸ் கணக்கின்படி படம் 30 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த வாரத்தில் விடுமுறை தினங்கள் அதிகமாக உள்ளதால், இப்படம் விரைவில் 50 கோடி ரூபாயை எட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இப்படத்தின் வெற்றி படக்குழுவினரை மகிழ்ச்சியடைய செய்துள்ளது. இயக்குனர் சுந்தர் சி, விஷால், வரலட்சுமி, மற்றும் அஞ்சலி ஆகியோர் கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து புரமோஷன் பணிகளை செய்து வருகிறார்கள். இப்படத்தின் வெற்றியை கொண்டாடும் வகையில் இன்று நடந்த வெற்றி விழாவில் இயக்குனர் சுந்தர் சி, விஷால், அஞ்சலி, மற்றும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஆகியோர் கலந்து கொண்டனர்.