1976-ஆம் ஆண்டு வெளியான ‘அன்னக்கிளி’ திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமானவர் இசைஞானி இளையராஜா. தமிழின் மட்டுமல்லாது, தெலுங்கு, இந்தி, கன்னடம், ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் 1,000-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்ததோடு, 10,000-க்கும் அதிகமான பாடல்களை உருவாக்கியுள்ளார்.

கடந்த மாதம் 8ஆம் தேதி, லண்டனில் ‘வேலியண்ட்’ சிம்பொனி நிகழ்ச்சியை அரங்கேற்றியுள்ளார். இதன் மூலம், முழுமையான மேற்கத்திய சிம்பொனி இசையை அரங்கேற்றிய முதல் இந்தியராக சாதனை படைத்துள்ளார். இந்தியாவிற்கே பெருமை சேர்த்த இளையராஜாவுக்கு பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள் வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.
அந்த வரிசையில், நடிகர் பாண்டியராஜன் மற்றும் அவரது மகன் பிரித்வி நேரில் சென்று அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.மேலும், வருகிற ஜூன் 2ஆம் தேதி, இளையராஜாவின் பிறந்த நாளை சிறப்பிக்கும் விதமாக, சென்னையில் அரசு சார்பில் பாராட்டு விழா நடத்தப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.