இயக்குனர் செல்வராகவன் இயக்கத்தில் கார்த்தி, பார்த்திபன், ரீமா சென் மற்றும் ஆண்ட்ரியா நடித்து 2010-ஆம் ஆண்டு வெளியான ‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம், அதன் வித்தியாசமான கதை மற்றும் காட்சி அமைப்புகளுக்காக திரையரங்குகளில் வெளியாகிய போது விமர்சன ரீதியாக பாராட்டைப் பெற்றது. காலப்போக்கில், இந்த திரைப்படம் தமிழ் ரசிகர்களிடையே பெரிதும் வரவேற்கப்பட்டு, ஒரு கல்ட் படமாக மாறியது.

‘ஆயிரத்தில் ஒருவன்’ திரைப்படம் 15 ஆண்டுகள் கழித்து, தெலுங்கு மொழியில் கடந்த மார்ச் 14ஆம் தேதி மீண்டும் திரையிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகம் குறித்து தனது எண்ணங்களை வெளிப்படுத்தியுள்ளார் இயக்குநர் செல்வராகவன்.

அவர் கூறியதாவது, “‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகம் குறித்த அறிவிப்பை நாங்கள் மிக விரைவாக வெளியிட்டுவிட்டோம் என்பது தான் நாங்கள் செய்த மிகப்பெரிய தவறு. கார்த்தி இல்லாமல் அந்தப் படத்தின் இரண்டாம் பாகம் எடுக்க முடியாது. சோழர்களும் பாண்டியர்களும் மையமாக உள்ள அந்த திரைக்கதை சற்று சிக்கலானதாகும். அந்தப் படத்தை இயக்க வேண்டுமெனும் ஆர்வம் எனக்கு உள்ளது. தற்போதைய சூழ்நிலையில் ‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகத்தை எடுப்பது மிகவும் எளிதாக இருக்கும்; முதல் பாகத்துடன் ஒப்பிட்டால் அதிக செலவாக இருக்காது. ஆனால் தயாரிப்பாளர் மற்றும் நடிகர்களிடம் குறைந்தது ஒரு வருட கால்ஷீட் தேவைப்படும். நேரம் சாதகமாக இருந்தால், ‘ஆயிரத்தில் ஒருவன்’ இரண்டாம் பாகம் விரைவில் தொடங்கும்” என்று அவர் தெரிவித்தார்.