கவிஞர் வைரமுத்து சமீபத்திய பேட்டியில், “தமிழ் பாடல்களில் பிறமொழிகளுக்கு மத்தியில் தமிழும் கொஞ்சம் பயன்படுத்தப்படுகிறது. ஆங்கிலத்துக்கு மத்தியில், சமஸ்கிருதத்துக்கு மத்தியில் அல்லது ஓசைகளுக்கு மத்தியில் பயன்படுத்தப்படுகிறது. இசை என்பது ஓசையாகிவிட்டது. இது மிகப்பெரிய விபத்து. அதனால் மொழி என்பது ஒலியாகிவிட்டது. இந்த இரண்டும் மீறி வரவேண்டும், மாறி வரவேண்டும். 25 ஆண்டுகளுக்கு முற்பட்ட படங்கள் இப்போது மீண்டும் மறுவெளியீடு காண்கின்றன. படங்கள் மறுவெளியீடு காண்பதற்கு நடிகர்களும், கதையும், வெற்றியும் மட்டும் காரணமல்ல பாடல்களும் காரணம்.நல்ல பாடல்கள் வேண்டும் என்றால் பழைய பாடல்களைத் தேடுகிறார்கள். இன்றும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. வெகு விரைவில் இது மாறும். நல்ல கதை, நல்ல இசை, பெண்களைப் பற்றிய கதை, காதல் கதை, வாழ்வின் மர்மங்களையும், வாழ்வின் மேன்மைகளையும் மெல்லிய மதிப்பீடுகளையும் உயர்த்திப் பிடிக்கின்ற கதைகள் வந்தால், பாட்டு மீண்டும் திரையுலகில் அரசாளும்” என்றுள்ளார்.
