வாமா என்டர்டெயின்மென்ட் சார்பில், விநீஷ் மில்லினியம் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஜோரா கைய தட்டுங்க’ திரைப்படத்தில் யோகி பாபு நடித்துள்ளார். இந்த படம் வருகிற 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது.

அதில் பேசும் போது யோகி பாபு கூறியதாவது: “15 வருடங்களுக்கு முன்பு வினி சார் தயாரித்த ‘தீக்குளிக்கும் பச்சை மரம்’ பாடத்தில் நான் நடித்திருந்தேன். அப்போது எனக்குச் சம்பளமாக ரூ.1000 கொடுத்தார். அதன் பிறகு 6 வருடங்களுக்கு மேலாக எங்களுக்குள் எந்த தொடர்பும் இல்லை. ஒருநாள் திடீரென அவர் என்னை அழைத்தார். அவருடைய நம்பர் எனக்கு இல்லையென்றாலும், அவரது குரல் கேட்டவுடன் ‘வினி சார் எப்படி இருக்கீங்க?’ என பேசினேன். அவர் அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார். எனக்கு உதவியவர்களை நான் ஒருபோதும் மறக்க மாட்டேன்.
அப்போது அவர் சொன்ன படம் தான் இப்போது தயாராகியுள்ளது. எனது சம்பளம் எவ்வளவு என்பது எனக்கே தெரியாது. அதை நான் தீர்மானிப்பதில்லை. வெளியே இருப்பவர்கள்தான் அதைப் புரிந்துகொண்டு முடிவு செய்கிறார்கள். எனது சம்பளத்தை தீர்மானிக்கிறவர்கள் அதைச் சரியாக வழங்கினால் எனக்கு போதும். ஆனால் அது குறித்து கேட்கும் போதே சிலர் எதிரியாகி விடுகிறார்கள்.
என்னிடம் உதவியாளராக வேலை செய்த ஒருவர், ஹீரோவாக ஒரு படத்தில் நடிக்கப்போவதாகச் சொன்னார். அந்த படத்தில் இரண்டு நாட்கள் நான் நடிக்க வேண்டும் எனக் கேட்டார். அதற்காக நான் ரூ.7 லட்சமா, 8 லட்சமா கேட்டதாக சொல்கிறார்கள். எனக்கு பணம் கொடுக்கவேண்டியவர்களின் பட்டியலே மிகப்பெரியது. எனவே தவறாக பேசவேண்டாம். எல்லாருக்கும் நான் ஆதரவு தருகிறேன். பேசவேண்டியவர்கள் பேசட்டும். இறைவன் பார்த்துக்கொள்வார்,” என்று தெரிவித்தார்.