தெலுங்கு இயக்குநர் பூரி ஜெகன்னாத் இயக்கத்தில் விஜய் சேதுபதி, சம்யுக்தா, தபு உள்ளிட்ட பலர் நடிக்கும் புதிய படம் தயாராகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் இப்படத்தின் தலைப்பை அறிவிக்க திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், கரூரில் த.வெ.க கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த நிலையில், அந்த நிகழ்வு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில், இப்படத்தின் இசையமைப்பாளராக ஹர்ஷவர்தன் ரமேஷ்வர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் பிறந்து வளர்ந்த ஹர்ஷவர்தன் இதற்கு முன்பு தமிழில் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’, ‘3:33’, ‘ஜோதி’ போன்ற படங்களுக்கு இசையமைத்துள்ளார்.
2017ல் தெலுங்கில் வெளிவந்த ‘அர்ஜுன் ரெட்டி’ திரைப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமான ஹர்ஷவர்தன், அதன் பின்னர் ஹிந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்துள்ளார். ‘அனிமல்’ திரைப்படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதை பெற்றவர் ஆவார். தற்போது தமிழில் ரவி மோகன் நடிக்கும் ‘ப்ரோ கோட்’ திரைப்படத்திற்கும் இசையமைத்து வருகிறார்.