தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக விளங்கிய பிரபாஸ், பாகுபலி திரைப்படத்தின் மூலம் பான் இந்தியா அளவில் பெரும் பிரபலமானார். அதன்பிறகு, அவரது நடிப்பில் வெளியான சலார் மற்றும் கல்கி 2898 ஏ.டி திரைப்படங்கள் மிகப்பெரிய வெற்றிப் படங்களாக அமைந்தன. தற்போது, மாருதி இயக்கத்தில் உருவாகும் ஹாரர் காமெடி திரைப்படமான தி ராஜா சாப் படத்தில் அவர் நடித்து வருகிறார்.

இந்த படத்தினை பீப்பிள் மீடியா பேக்டரி மற்றும் ஜிஎஸ்கே மீடியா ஆகிய தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன. தமன் இசையமைக்கும் இப்படத்தில், மாளவிகா மோகனன், நிதி அகர்வால், யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இந்நிலையில், இப்படத்தின் பாடல்கள் குறித்து இசையமைப்பாளர் தமன் தகவல் தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது: “சில காலத்திற்கு முன்பு தி ராஜா சாப் படத்திற்கான பாடல்களை உருவாக்கியிருந்தேன். ஆனால், அவை இன்னும் படமாக்கப்படாததால், அவற்றை பழையதாக உணர்ந்தேன். எனவே, அந்த பாடல்களை நீக்கிவிட்டு, மீண்டும் புதிதாக பாடல்களை உருவாக்கி வருகிறேன் என்றுள்ளார்.