இந்த ஆண்டு பொங்கல் விடுமுறையையொட்டி பல திரைப்படங்கள் வெளியாக உள்ளன. அதன்படி, கேம் சேஞ்சர், வணங்கான், மெட்ராஸ்காரன், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா, படை தலைவன், தருணம், டென் ஹவர்ஸ் ஆகிய படங்கள் திரையரங்குகளில் வரவிருக்கின்றன.
இந்த பொங்கல் போட்டியில், விஷால் நடித்துள்ள மதகஜராஜா திரைப்படமும் நேற்று இணைந்தது. இந்த படம் வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. விஷால், சந்தானம், வரலட்சுமி சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இத்திரைப்படம் முதலில் 2013 பொங்கலுக்கு வெளியீடாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், பல காரணங்களால் படம் தயாரிப்பில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக தாமதமடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், மதகஜராஜா திரைப்படம் குறித்து நடிகர் விஷால் ஒரு நெகிழ்ச்சிப் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், “12 ஆண்டுகளுக்குப் பிறகு, எனது மிகவும் பிடித்த குடும்ப கேளிக்கைப்படமான மதகஜராஜா பொங்கலுக்கு வெளியாகிறது. அது மட்டும் இல்லை, சுந்தர் சி மற்றும் சந்தானம் ஆகியோருடன் இணைந்து நான் நடித்த படம் என்பதால் இது எனக்கு தனிச்சிறப்பு. படம் நிச்சயமாக சிரிப்புக்கு பஞ்சமில்லாமல் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.