லாபதா லேடீஸ் திரைப்படம் கடந்த மார்ச் 1ஆம் தேதி வெளியானது. ரசிகர்கள் மத்தியில் இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. திரையரங்குகளில் ரிலீஸ் ஆகுவதற்கு முன்பு, இப்படம் 48வது டொரண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. அங்கு படம் பார்த்த ரசிகர்கள் படக்குழுவினரை பாராட்டினர். மேலும், பல்வேறு சர்வதேச திரைப்பட விழாக்களில் இப்படத்தை திரையிட வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர். இந்த படத்தை பாலிவுட் சூப்பர்ஸ்டார் அமீர்கானின் முன்னாள் மனைவி கிரண் ராவ் இயக்கியிருந்தார்.
சர்வதேச திரைப்பட விழாவில் இப்படத்திற்கு கிடைத்த பாராட்டுகள், இதை ஆஸ்காருக்கு கொண்டு செல்ல வேண்டும் என பலரின் ஆதரவைப் பெற்றன. தயாரிப்பாளர்களான அமீர் கான் மற்றும் கிரண் ராவ் இதற்கான பணிகளை தீவிரமாக முன்னெடுத்து வந்தனர். இதன் அடிப்படையாக, இந்தியா சார்பில் 97வது ஆஸ்கார் நாமினேஷனுக்குப் பரிந்துரைக்கப்பட்டு, அதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன.
ஆஸ்கார் ரேஸுக்காக, கடந்த சில மாதங்களாக படக்குழு நியூயார்க்கில் முகாமிட்டிருந்தது. மேலும், படம் வெளியிடப்படும் பெயரை லாபதா லேடீஸ் என்பதில் இருந்து லாஸ்ட் லேடீஸ் என மாற்றியதும், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றது. ஆனால், தற்போது வெளிநாட்டு பிரிவு ஆஸ்காருக்கான டாப் 15 படங்களின் பட்டியலில் இப்படம் தற்போது இடம் பெறவில்லை. இது ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.