பாரதிராஜா இயக்கிய ‘காதல் ஓவியம்’ படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானவர் கண்ணன். பாரதிராஜா உருவாக்கிய கே.பாக்யராஜ், சுதாகர், கார்த்திக், பாண்டியன் உள்ளிட்ட பல நடிகர்கள் பின்னாளில் பெரும் புகழைப் பெற்றனர். ஆனால், ‘காதல் ஓவியம்’ படத்திற்கு பிறகு , அதில் நடித்த கண்ணன் திரைப்படத்துறையில் தொடர்ந்து வளர்ச்சி பெற முடியவில்லை. பின்னர் சில படங்களில் நடித்த அவர், பின்னாளில் திரைத்துறையை விட்டு விலகி விட்டார்.

தற்போது தொழிலதிபராக இருக்கும் கண்ணன், ‘சக்தி திருமகன்’ திரைப்படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து திரையுலகுக்கு மீண்டும் வருகிறார். ‘அருவி’ மற்றும் ‘வாழ்’ படங்களை இயக்கிய அருண் பிரபு இந்தப் படத்தை இயக்குகிறார்.

இது, விஜய் ஆண்டனி நடிக்கும் 25வது திரைப்படமாகும். விஜய் ஆண்டனி பிலிம்ஸ் கார்ப்பரேஷன் சார்பில் மீரா விஜய் ஆண்டனி தயாரிக்கிறார். இதில் வாகை சந்திரசேகர், சுனில் கிரிப்லானி, செல் முருகன், திருப்தி ரவீந்திரன், கிரண், ரியா ஜித்து, ஷோபா விஸ்வநாத் மற்றும் குழந்தை நட்சத்திரம் மாஸ்டர் கேசவ் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். படத்திற்கான இசையமைப்பை விஜய் ஆண்டனி கவனிக்க, ஒளிப்பதிவை ஷெல்லி மேற்கொள்கிறார்.