கன்னட திரையுலகில் வளர்ந்து வரும் நடிகை குஷி ரவி. ‘தியா’ என்ற கன்னட திரைப்படத்தின் மூலம் புகழ்பெற்ற அவர், அதற்கு பிறகு ‘பிண்டம்’ படத்தின் மூலம் தெலுங்கில் அறிமுகமானார். தற்போது ‘பட்டி’ என்ற இசை ஆல்பம் மூலம் தமிழிலும் முதல் வருகை தருகிறார்.

வார் ஹார்ஸ் புரொடக்ஷன்ஸ் சார்பில் தீபா லக்ஷ்மண் பிரபு தயாரிப்பில், சத்தியசீலன் இயக்கத்தில், பிரியா மாலி இசையில், விவேக் வரிகளில் உருவாகியுள்ள ஆல்பம் தான் ‘பட்டி’. இதில் தர்ஷன் மற்றும் குஷி ரவி நடித்து ஆடியுள்ளனர். இந்த ஆல்பத்தை இயக்கிய சத்தியசீலன், பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜின் உதவியாளராக பணியாற்றியவர். படத்திற்கான ஒளிப்பதிவை மாதேஷ் மாணிக்கம் மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆல்பம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில், காதலர் தினத்திற்காக நேற்று வெளியிடப்பட்டது. தீபா என்ற பெண், சுதந்திரமான வாழ்க்கையை வாழ விரும்புகிறார். பைக் ஓட்டுவதும், ஒலிகளை துல்லியமாக ரசிப்பதும் அவரது பெரிய விருப்பங்கள். காதலனை ‘பட்டி’ என்று செல்லமாக அழைக்கும் தீபா, ஒரு நாள் காதலருடன் ஏற்காட்டுக்கு பைக்கில் பயணிக்கிறார். ஆனால், வழியில் எதிர்பாராத சம்பவம் ஒன்று நிகழ்கிறது. அது அவரது வாழ்க்கையை முற்றிலும் புரட்டிப் போடுகிறது. இதுவே இந்த ஆல்பத்தின் கதையாக உருவாகியுள்ளது. பிரவீன் ஜி நடனம் அமைத்துள்ளார்.