சித்தார்த் நடித்த ‘சித்தா’ திரைப்படத்தை இயக்கியவர் எஸ்.யு. அருண்குமார். இதற்கு முன் அவர் ‘பண்ணையாரும் பத்மினியும்’ என்ற கிராமத்து வாழ்கையை மையமாக கொண்ட படத்தை இயக்கியிருந்தார். அதன் பிறகு ‘சேதுபதி ஐபிஎஸ்’ என்ற அதிரடியான ஆக்ஷன் திரைப்படத்தையும் வழங்கினார். எனவே, ‘சித்தா’ போன்ற படத்தை இயக்கிய அவர் தற்போது ‘வீரதீர சூரன்’ என்ற அதிரடி ஆக்ஷன் படத்தை இயக்கியிருப்பதில் ஆச்சரியமெல்லாம் ஒன்றும் இல்லை. இதற்கிடையில் கடந்த சில வருடங்களாக விக்ரமின் படங்கள் எந்தவொரு பெரும் வெற்றியையும் பெறவில்லை. ‘தங்கலான்’ கூட அவரின் நடிப்புக்கு மட்டுமே பாராட்டப்பட்டது; ஆனால், அது வெற்றிப்படமாக மாறவில்லை.
இந்நிலையில், ‘வீரதீர சூரன்’ திரைப்படத்தை சுற்றி திரையுலகிலும், ரசிகர்களிடமும் அதிகமான எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. சமீபத்தில் வெளியான டிரைலர் அந்த எதிர்பார்ப்பை மேலும் உயர்த்தியுள்ளது. இப்போது, இந்தப் படம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடித்த ‘கைதி’ படத்தினை போல் ஒரே இரவில் நடக்கும் கதையை போல் விறுவிறுப்பாக இருக்கலாம் என கூறப்படுகிறது.
‘கைதி’ திரைப்படம் ஒரே நாளின் நள்ளிரவில் நடைபெறும் ஒரு அதிரடியான ஆக்ஷன் கதையாக அமைந்தது. அதேபோல், ‘வீரதீர சூரன்’ படத்தின் கதையும் ஒரே நாள் இரவில் நடைபெறும் வகையில் உருவாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்தப் படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு இரவிலேயே நடைபெற்று இருக்கிறது. இதில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள மலையாள நடிகர் சுராஜ் வெஞ்சாரமூடு, சமீபத்தில் நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் பேசும் போது, இப்படத்தின் கதை முழுவதுமாக ஒரு இரவில் நடக்கிறது என்றும் குறிப்பிட்டார். அதேசமயம், இந்தப் படத்தை பார்ப்பதற்கு வரும் பார்வையாளர்கள், பட ஆரம்பிக்கும் முன் 10 நிமிடங்களுக்கு முன்பே வந்து அமர வேண்டும் என்றும் கூறியுள்ளார். காரணம், படத்தின் very first shot-இலிருந்து கதைக்களம் ஆரம்பித்து விடுகிறது. இது திரையரங்கில் நேரில் பார்த்து அனுபவிக்க வேண்டிய படம் என அவர் கூறியிருப்பது, ரசிகர்களின் எதிர்பார்ப்பை மேலும் அதிகரிக்கச் செய்துள்ளது.