தமிழ் திரைப்பட உலகில் ரசிகர்களால் விரும்பப்படும் நடிகர்களில் ஒருவர் சிவகார்த்திகேயன். சமீபத்தில் அவரது நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் மிகுந்த வரவேற்பைப் பெற்று, வெற்றியடைந்தது. இந்த வெற்றியைத் தொடர்ந்து, ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் உருவாகியுள்ள அவரது 23-வது திரைப்படமான மதராசி படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. இந்த படம் எதிர்வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

இப்போது அவர், இயக்குநர் சுதா கொங்கராவின் இயக்கத்தில் உருவாகி வரும் பராசக்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் மற்றும் பாசில் ஜோசப் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகிறார்கள். இந்த திரைப்படம் இந்தி மொழி சூழ்நிலையை மையமாகக் கொண்டு உருவாகிறது. இதில் சிவகார்த்திகேயன் ஒரு கல்லூரி மாணவனாக நடிக்கிறார்.
இத்துடன், சிவகார்த்திகேயனின் அடுத்த படத்தை யார் இயக்கப்போகிறார்கள் என்ற விவரங்கள் குறித்து, விநாயக் சந்திரசேகரன், வெங்கட் பிரபு அல்லது சிபி சக்கரவர்த்தி ஆகிய இயக்குநர்களில் ஒருவராக இருக்கலாம் என்று கூறப்பட்டு வந்தது. ஆனால் இதுவரை அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது கார்த்திக் சுப்புராஜ் சிவகார்த்திகேயனிடம் கதை ஒன்று கூறியதாகவும் அது அவருக்கு பிடித்துப்போக அவரின் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார் என்றும், அவருக்கு ஜோடியாக ஸ்ருதிஹாசன் நடிக்கவுள்ளதாகவும் அதிகாரபூர்வமற்ற தகவல்கள் உலாவருகின்றன. இதற்கு முன்பு, சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ருதிஹாசன் இருவரும் இணைந்து தனுஷின் 3 திரைப்படத்தில் நடித்திருந்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.