‘கச்சேரி சேரா, ஆசை கூட’ ஆகிய ஆல்பங்களின் மூலம் பிரபலமானவர் சாய் அபயங்கர். இவர் பின்னணிப் பாடகர் திப்பு மற்றும் பாடகி ஹரிணி தம்பதியினரின் மகன். தற்போது ‘பென்ஸ்’, ‘சூர்யா 45’ ஆகிய இரண்டு படங்களுக்கு இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் எழுதிய கதையில், பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடித்து வரும் படம்தான் ‘பென்ஸ்’. ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் அவரது 45வது படத்திற்கு முதலில் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. ஆனால், அவருடைய விலகல் காரணமாக சாய் அபயங்கர் இந்தப் படத்திற்கும் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளார்.

இந்நிலையில், பிப்ரவரி 3 ஆம் தேதி சிம்புவின் பிறந்தநாளில், அவரது மூன்று படங்களின் அப்டேட்டுகள் வெளியானது. ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகும் சிம்புவின் 49வது படத்திற்கும், அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகும் 51வது படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைப்பாளராக ஒப்பந்தமாகியுள்ளதாக கோலிவுட் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முதலில் இந்த படங்களுக்காக அனிருத் இசையமைப்பதாக பேச்சுவார்த்தை நடந்ததாம். ஆனால், சில காரணங்களால் அது முடிவாகாமல் போனதால், சாய் அபயங்கர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. சிம்புவின் இரண்டு படங்களுக்குத் தொடர்ந்து இசையமைப்பது திரையுலகில் பெரிய ஆச்சரியமாக பார்க்கப்படுகிறது.
மேலும், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகும் சிம்புவின் 50வது படத்திற்கும் யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். தமிழ்சினிமாவைத் தாண்டி தெலுங்கு படங்களுக்கும் சாய் அபயங்கர் இசையமைப்பதாக பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. அட்லி – அல்லு அர்ஜுன் கூட்டணியில் உருவாக உள்ள படத்திற்கும் சாய் அபயங்கர் இசையமைக்க வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.