தமிழ் திரைப்படத்துறையில் முன்னணி இயக்குநர்களில் ஒருவராக வினோத் வலம் வருகிறார். சதுரங்க வேட்டை, தீரன் அதிகாரம் ஒன்று, நேர்கொண்ட பார்வை, வலிமை, துணிவு போன்ற வெற்றிப் படங்களை இயக்கியுள்ளார்.

இந்த படங்களில் அஜித்துடன் தொடர்ச்சியாக மூன்று படங்களை இயக்கியிருக்கிறார். தற்போது விஜய்யின் ‘ஜனநாயகன்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். அந்தப் படத்தின் படப்பிடிப்பு முடிந்து, இதையடுத்து பிற தயாரிப்புப் பணிகள் தொடங்கியுள்ளன.
இப்போது தனுஷை வைத்து ஒரு புதிய படத்தையும் இயக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், தற்போது முன்னணி இயக்குநர்களும் தயாரிப்பாளர்களாக மாறும் போக்கில், இயக்குநர் வினோத் புதிய தயாரிப்பு நிறுவனத்தை தொடங்க உள்ளார். அந்நிறுவனத்தின் முதல் படத்தை ‘குற்றம் கடிதல்’ படத்தை இயக்கிய பிரம்மா இயக்கவுள்ளார். அந்தப் படத்தில் கதாநாயகனாக, சின்னத்திரையில் பிரபலமடைந்தும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துகொண்டும் புகழ்பெற்ற ராஜூ நடிக்க ஒப்பந்தமாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் புதிய முயற்சி குறித்து விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என எதிர்பார்க்கப்படுகிறது.