ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடிகர் அஜித் குமார் நடித்துள்ள திரைப்படம் ‘குட் பேட் அக்லி’. இந்த படத்தில் அஜித் மூன்று வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். அவருடன் திரிஷா, பிரசன்னா, சுனில், அர்ஜுன் தாஸ், பிரபு உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்திற்கு இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ளார்.

‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வருகிற ஏப்ரல் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் டீசர் வெளியான 24 மணி நேரத்திற்குள் 32 மில்லியன் பார்வைகள் பெற்றுள்ளது. இதன்மூலம், கோலிவுட் திரைப்படங்களின் வரலாற்றில் மிக அதிக பார்வைகள் பெற்ற டீசராக உருவெடுத்துள்ளது.
‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியாகும் அதே நாளில் நடிகர் தனுஷ் இயக்கி நடித்த ‘இட்லி கடை’ படமும் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், இறுதிநேரத்தில் ‘இட்லி கடை’ வெளியீடு தள்ளிப் போகலாம் என்று கூறப்படுகிறது.இதேநிலையில், நடிகர் அஜித், தனுஷ் இயக்கும் புதிய திரைப்படத்தில் நடிக்கவுள்ளார் என தகவல் வேகமாக பரவி வருகிறது. மேலும், இப்படத்தை தனுஷின் ‘வொண்டர்பார்’ நிறுவனம் தயாரிக்கவுள்ளது என்றும் அனிருத் இசையமைக்கிறார் என்றும் கூறப்படுகிறது.