மலையாளத் திரைப்பட நடிகரான துல்கர் சல்மான் கடந்த சில ஆண்டுகளாக மலையாளப் படங்களைத் தாண்டி, தமிழ், தெலுங்கு, ஹிந்தி போன்ற பிற மொழித் திரைப்படங்களிலும் ஆர்வத்துடன் நடித்துவருகிறார். தற்போது அவர் ஒரு புதிய தெலுங்குத் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இந்த படத்தில் பரசுராமின் உதவி இயக்குநரான ரவி என்பவர் இயக்குநராக உள்ளார், இதில் கதாநாயகனாக துல்கர் சல்மான் நடிக்கிறார். இந்தத் திரைப்படத்தை ஸ்ரீ லஷ்மி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இதில் துல்கர் சல்மானுடன் இணைந்து பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடிக்கிறார். சில மாதங்களுக்குப் பிறகு பூஜா ஹெக்டே மீண்டும் ஒரு தெலுங்கு படத்தில் நடிக்கிறார். இதற்கு முன், “சீதா ராமம்” படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இருந்தார்.
ஆனால், கால்ஷீட் பிரச்சனை காரணமாக அந்த படத்தில் அவர் நடிக்க முடியவில்லை. அவரது பதிலாக மிருணாள் தாக்கூர் அந்த வேடத்தில் நடித்தார். ஆனால் தற்போது வெளியாகவுள்ள புதிய இந்தத் திரைப்படத்தின் மூலம் துல்கர் சல்மானும் பூஜா ஹெக்டேயும் முதன்முறையாக ஒரே படத்தில் இணைந்து நடிக்க இருக்கின்றனர்.