தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநரான சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகும் திரைப்படம் ‘பராசக்தி’. இப்படத்தில் ரவி மோகன், அதர்வா மற்றும் ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்து வருகின்றனர்.இந்த படத்தின் கதைக்களம், 1965ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற ஹிந்தி மொழி திணிப்புக்கு எதிரான போராட்டங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இப்படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கின்றது. இசையமைப்பாளராக ஜி.வி.பிரகாஷ் பணியாற்றுகிறார்.

முன்னதாக இப்படத்தின் படப்பிடிப்பு சிதம்பரம், மதுரை மற்றும் இலங்கை போன்ற இடங்களில் நடைபெற்றது. தற்போது மீண்டும் இப்படத்தின் அடுத்தகட்ட படப்பிடிப்பு தொடங்கப்பட்டு தற்போது பொள்ளாச்சி பகுதியில் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது.
இதில் சிவகார்த்திகேயன் மற்றும் ஸ்ரீ லீலா உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பங்கேற்று நடித்து வருகின்றனர். இதற்கிடையில், இப்படத்திற்குத் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகர் ராணாவும் இப்படத்தில் இணைந்துள்ளார் என்று தகவல் வெளியாகியுள்ளது. மேலும் அவர் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும்போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.