தெலுங்கு திரைப்பட உலகின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக விளங்குகிறார் அல்லு அர்ஜுன். ‘புஷ்பா 2’ திரைப்படத்தின் மிகப்பெரிய வெற்றியும் வசூலும் அவரை பான் இந்தியா நட்சத்திரமாக உயர்த்தியுள்ளது. தற்போது, அவரது அடுத்த படத்தை தமிழ் இயக்குநர் அட்லி இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. வரும் ஏப்ரல் 8ஆம் தேதி, அல்லு அர்ஜுனின் பிறந்தநாளில் இந்தப் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தப் படத்தில் அல்லு அர்ஜுன் இரட்டை வேடங்களில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இரட்டையர்களாகப் பிறந்த சகோதரர்களாக அவர் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதைக்களம் அவரை மிகவும் ஈர்த்துவிட்டதாக கூறப்படுகின்றது. கடந்த 22 ஆண்டுகளாக திரைப்படத் துறையில் இருக்கும் அவர் இதுவரை இரட்டை வேடங்களில் நடிக்கவில்லை. இந்தப் படத்தின் மூலம் முதல் முறையாக அவர் இரு வேடங்களில் நடிக்க உள்ளார்.
மிகுந்த பொருட்செலவில், அதிரடி ஆக்ஷன் நிறைந்த திரைப்படமாக இது உருவாக இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இன்னும் ஒரு வாரத்திற்குள் இப்படம் பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவரும் என்பது உறுதி என டோலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.