தனுஷ் நடித்த ‘வாத்தி’ படத்தில் கதாநாயகியாக நடித்த சம்யுக்தா, தற்போது ‘அகான்டா 2’ உள்ளிட்ட சில தெலுங்கு படங்களிலும், ஹிந்தி மற்றும் மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். சமீபத்தில், உத்தரபிரதேச மாநிலம் பிரயாக்ராஜில் நடைபெறும் மகா கும்பமேளாவில், கங்கையில் புனித நீராடிய பிறகு, அந்த அனுபவத்தை பற்றிய புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.

அவர் இதுகுறித்து, “வாழ்க்கையை ஆழமாக புரிந்துகொள்ளும் போது அதன் உண்மையான அர்த்தம் வெளிப்படும். மகா கும்பமேளாவில், கங்கையின் புனித நீரோட்டம் போன்றே, வாழ்க்கையின் எல்லையற்ற உணர்வும், அது அளிக்கும் ஆனந்தமும் நம்மை முழுமையாக நிரப்பும். இந்த புனித தருணத்திற்கு நான் என் கலாச்சாரத்துக்கு நன்றி கூறுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.

‘கேஜிஎப்’ படத்தின் நாயகி ஸ்ரீநிதி ஷெட்டியும் கும்பமேளாவில் பங்கேற்று, புனித நீராடியுள்ளார். இதுகுறித்து அவர் தனது அனுபவத்தை பகிர்ந்து, “பிரயாக் என்னை தானாகவே அழைத்தது போல உணர்கிறேன். ஆரம்பத்தில் எனக்கு எந்த திட்டமோ இல்லை. வேலைப்பளுவில் முழுமையாக இருந்தேன். ஆனால், எதிர்பாராத விதமாக ஒரு நிகழ்வு மற்றொன்றிற்கு வழிவகுத்தது. பின்னர், விமானம் முன்பதிவு செய்தேன், தங்குமிடம் பார்த்தேன், ஒரு பையை வாங்கினேன், இங்கேயே தங்கிவிட்டேன். மில்லியன் கணக்கான மக்களுக்கிடையே நான் என் வழிகளை தேடிக் கொண்டிருக்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.