பிரித்விராஜ் இயக்கத்தில், மோகன்லால் நடிப்பில் கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘லூசிஃபர்’. அந்த திரைப்படத்தின் இரண்டாம் பாகமாக உருவான ‘எல் 2: எம்புரான்’ கடந்த 27ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தப் படத்தை கோகுலம் மூவிஸ் மற்றும் லைகா புரொடக்சன்ஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
‘எம்புரான்’ திரைப்படத்தில் குஜராத் கலவரம் தொடர்பான காட்சிகள் இடம்பெற்றுள்ளதாக கூறி பா.ஜ.க.வினர் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்தனர். இதையடுத்து, சில காட்சிகள் படத்தில் இருந்து அகற்றப்பட்டு, படத்தை மறுமுறையாக வெளியிட்டனர்.
இந்த ‘எம்புரான்’ திரைப்படத்தின் தயாரிப்பாளர்களில் ஒருவரான கோகுலம் நிதி நிறுவனத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணனின் சொந்தமான இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடிச் சோதனைகள் நடத்தியது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து, ‘எம்புரான்’ திரைப்பட இயக்குநரான நடிகர் பிரித்விராஜ்க்கு வருமான வரித்துறை அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். இவர் இப்படத்தின் இணை தயாரிப்பாளராகவும் இருந்துள்ளார்.
பிரித்விராஜ் ‘எம்புரான்’ படத்தில் பணியாற்றியதற்காக ரூ.40 கோடி சம்பளமாக பெற்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பணம் ஒரு கட்டுமான நிறுவனத்தின் பெயரில் பெற்றதாகவும், மேலும் அவர் நடித்த கடுவா, ஜன கண மன மற்றும் கோல்ட் போன்ற படங்களில் பெற்ற சம்பளத்தையும் வைத்து வருமான வரித்துறை அவரிடம் விளக்கம் கேட்டுள்ளது.