தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான சிவகார்த்திகேயன், இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23-வது திரைப்படமான மதராஸியில் நடித்து முடித்துள்ளார். இதில் ருக்மிணி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், பிஜு மேனன், டான்சிங் ரோஸ் சபீர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

அனிருத் இசையமைத்த இப்படம் வரும் செப்டம்பர் 5-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இதற்கான ட்ரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா நேற்று நடைபெற்றது. இதில் முருகதாஸ், அனிருத், சிவகார்த்திகேயன், ருக்மிணி வசந்த் உட்பட படக்குழுவினர் பங்கேற்றனர். அப்போது பேசிய சிவகார்த்திகேயன்,
“விஜய் சார் உடன் கோட் படத்தில் நடித்த பிறகு, என்னை அடுத்த தளபதி, திடீர் தளபதி என்று சிலர் கூறினார்கள். ஆனால் அண்ணன் அண்ணன்தான், தம்பி தம்பிதான். அவர் அப்படிச் சிந்தித்திருந்தால் துப்பாக்கியை கொடுத்திருக்க மாட்டார், நானும் அப்படிச் சிந்தித்திருந்தால் துப்பாக்கியை எடுத்திருக்க மாட்டேன். சிலர், நான் விஜய் சார் ரசிகர்களை பிடிக்க முயல்கிறேன் என்கிறார்கள். ஆனால் அப்படி ஒருபோதும் நடக்க முடியாது. அஜித் சார் ரசிகர் மன்றத்தை கலைத்தபோதும், அவரை பின்தொடரும் மிகப்பெரிய ரசிகர்கள் கூட்டம் இன்னும் இருக்கிறது. அதுபோல ரஜினி சார், சிம்பு சார், தனுஷ் சார் என பலருக்கும் தங்கள் ரசிகர்கள் இருக்கிறார்கள். ஆனால் நான் இப்போதுதான் எனது ரசிகர்களை சம்பாதிக்கத் தொடங்கியுள்ளேன்” என்றார்.