36 ஆண்டுகளுக்கு பிறகு கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து பணியாற்றியுள்ள திரைப்படம் ‘தக் லைப்’. இந்த படத்தில் சிம்பு, திரிஷா, ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, கவுதம் கார்த்திக் மற்றும் பாலிவுட் நடிகர் அலி பசல் உள்ளிட்டோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். இசை அமைப்பாளராக ஏ.ஆர். ரஹ்மான் பணியாற்றியுள்ள இந்த படத்தை ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல், மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் ரெட் ஜெயன்ட் மூவிஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. படம் வருகிற ஜூன் 5ஆம் தேதி திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது.

இப்படத்தின் விளம்பர பணிகளில் தற்போது படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் நடிகர் கமல்ஹாசன், நடிகை திரிஷா மற்றும் நடிகர் சிம்பு ஆகியோர் இணைந்து கொடுத்த ஒரு பேட்டியில் ‘தக் லைப்’ படத்தில் பணியாற்றிய அனுபவங்களை பகிர்ந்தனர். அந்த நேரத்தில் கமல்ஹாசன் கூறியதாவது: “நான் நடிக்க கற்றது என் அண்ணன் மற்றும் அப்பாவைப் பார்த்துதான். அதுவே என் வாழ்க்கையும், நடிப்பும். மக்களை சற்று கவனமாக பார்த்தால் போதும், ஒவ்வொருவரிடமும் ஒரு கதாபாத்திரம் இருக்கிறது. அந்த எல்லா கதாபாத்திரங்களையும் நான் செய்யமுடியுமா என்பது தெரியவில்லை. ஆனால் அவர்கள் வழியே தான் நான் கற்றுக்கொள்கிறேன்.
இப்போது இருக்கும் அனைத்து தகவல் தொடர்பு உபகரணங்களுக்கும் நான் நன்றிசொல்கிறேன். அவை இல்லையென்றால் வாழ்க்கையோடு தொடர்பு இழந்துவிடுவோம். ஊடகங்களின் மூலமாகத்தான் நான் அரசியலுக்குள் சென்றேன். ஊடகங்கள் செய்யும் நன்றியையும் பேசவேண்டும் என்பதற்காக இதை சொல்கிறேன். எங்களை ஒரு நட்சத்திர அந்தஸ்தில் வைத்து, எதையும் செய்ய விடாமல் கட்டுப்படுத்துகிறார்கள். நாங்கள் சாதாரண வாழ்க்கையை இழந்துவிட்டவர்கள். அதனால்தான் சிலர் வித்தியாசமாக நடந்து கொள்கிறார்கள். இதை நானும் சிம்பும் மூன்று வயதிலிருந்து அனுபவித்து வருகிறோம். எங்கள் மொபைல் போனில் நீங்கள் அறியாமல், உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அங்கேதான் எங்களுக்குத் தேவையான கதாப்பாத்திரங்களை நாங்கள் தேர்ந்தெடுக்கிறோம்” எனக் கூறினார் கமல்ஹாசன்.