நடிகர் பிரித்விராஜ் சில வருடங்களுக்கு முன்பு மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன் தொடர்ச்சியாக எம்புரான் படத்தை இயக்கினார். கடந்த மார்ச் மாதம் வெளியான அந்த படம் கலவையான விமர்சனங்களைச் சந்தித்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொட முடியவில்லை என்றாலும், 200 கோடிக்கு மேல் வசூல் செய்து அனைவரையும் ஆச்சரியப்படுத்தியது.

இந்த நிலையில் பிரித்விராஜ் நடிப்பில் உருவான விலாயத் புத்தா திரைப்படம் வரும் நவம்பர் 21ம் தேதி வெளியாகிறது. இதன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட அவர், எம்புரான் படம் குறித்து மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது, நான் ரசிகர்களை பொழுதுபோக்கச் செய்வதற்காகத்தான் அந்த படத்தை எடுத்தேன். ஆனால் நான் எதிர்பாராத விதமாக பல குறுக்கீடுகள் ஏற்பட்டன. சில விஷயங்கள் நான் நினைத்ததுபோல இருந்தாலும், பல விஷயங்கள் நான் யூகிக்காத முறையில் நடந்தன.
ஒரு படத்தை உருவாக்கி வெளியிட்ட பிறகு ரசிகர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக கூறிவிட்டால், அதற்குப் பிறகு அதைப் பற்றி தொடர்ந்து விளக்கம் கூறுவதில் எந்த பயனும் இல்லை. நான் சொல்ல வந்ததை ரசிகர்கள் புரிந்திருந்தால், அது எனக்கு வெற்றி. புரியவில்லை என்றால், ஒரு இயக்குநராக அது எனக்கு தோல்விதான். அதை ஏற்றுக்கொள்ளவேண்டும்.அடுத்த படத்தில் இன்னும் சிறப்பாக செய்வதற்காக முயற்சி செய்ய வேண்டும் என்று பிரித்விராஜ் தெரிவித்துள்ளார்.

