கோவை மாவட்டத்தில் கொடிசியா மைதானத்தில் அடுத்த மாதம் 12-ந்தேதி இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜாவின் இசை நிகழ்ச்சி நடைபெற உள்ளது. இந்த நிகழ்ச்சியை முன்னிட்டு, கோவையில் செய்தியாளர்களுடன் பேசிய யுவன், பழைய பாடல்களை ரீமேக் செய்வதால் அதன் உண்மையான தன்மை மாறாது எனத் தெரிவித்தார்.
மேலும், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பம் வளர்ந்து வரும் காரணத்தால், எதிர்வரும் 10 ஆண்டுகளில் இசையமைப்பாளர்களுக்கு வேலை இருக்காது என்றும், ஏ.ஐ. மென்பொருள் மூலம் உருவாக்கத் தெரிந்தவர்கள் மட்டுமே நிலைத்து நிற்க முடியும் என்றும் கூறினார்.
பின்னர் நடிகர் விஜய்யின் புதிய அரசியல் கட்சியைப் பற்றி கேள்வி எழுப்பிய செய்தியாளர்களுக்கு, “விஜய்க்கு ஆல் தி பெஸ்ட்” என்று அவர் பதிலளித்தார். மேலும், விஜய்யின் கட்சிக்கு பாடல் கேட்டால், அதை நிச்சயம் செய்து தருவேன் என்றும் தெரிவித்தார். விஜய்யின் சமீபத்திய திரைப்படமான தி கோட்க்கு இசையமைத்தது யுவன் சங்கர் ராஜா என்பதும் குறிப்பிடத்தக்கது.