தெலுங்கு திரைப்படங்களில் முன்னணியில் இருந்த நடிகை இலியானா டி குரூஸ், ‘கேடி’ திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பின்னர், விஜய்யுடன் நடித்த ‘நண்பன்’ படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். தமிழ், தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமல்லாது, பாலிவுட்டிலும் பல படங்களில் நடித்துள்ளார்.

தற்போது அவர் தனது தனிப்பட்ட வாழ்வில் முழு கவனத்தையும் செலுத்தி வருகிறார். விரைவில் தனது இரண்டாவது குழந்தையை எதிர்பார்த்து வருகின்றார். இந்நிலையில், சமீபத்தில் சமூக ஊடகங்களில் தனது ரசிகர்களுடன் உரையாடிய போது, குழந்தைகளை வளர்ப்பது மற்றும் உண்மையான அன்பு குறித்து தனது எண்ணங்களைப் பகிர்ந்துள்ளார்.
அப்போது அவர் கூறியதாவது, “ஒரு குழந்தை தாயின் அன்பை சம்பாதிக்க வேண்டும் என்று நினைப்பது எனக்கு மிகவும் கடுமையான விஷயமாக தோன்றுகிறது. அன்பு என்பது இயற்கையாக வர வேண்டிய ஒன்று; அதை சம்பாதிக்க முடியாது. மரியாதை மற்றும் மகிழ்ச்சி போலவே, அன்பும் இயல்பாகவே இருக்க வேண்டும்.
என் குழந்தைகள் அன்பும், மகிழ்ச்சியும் நிரம்பியவர்களாகவும், உடல்நலத்துடனும் வளரவேண்டும் என்பதே என் விருப்பம். இதையே அனைத்து பெற்றோரும் விரும்புவார்கள் என நான் நம்புகிறேன். என் பிள்ளைகள் எவ்வளவு நேசிக்கப்படுகிறார்கள் என்பதையும் உணரச் செய்ய, என்னால் இயன்ற எல்லாவற்றையும் செய்வேன்” என்றார்.