இசைஞானி இளையராஜா இன்றும் இளம் இசையமைப்பாளர்களுக்கு கடும் போட்டியளித்து வருவதுடன், தற்போதைய தலைமுறையினரையும் தனது இசையில் கட்டிப்போட்டு மகிழ வைத்துக்கொண்டு இருக்கிறார். சமீபத்தில் அவர் நடித்த விடுதலை 2 திரைப்படம் வெளியானது. இதனிடையே, ஒரு தனியார் ஊடகத்துக்கு அவர் அளித்த பேட்டி சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த பேட்டியில், “ஒருமுறை நான் ஒரு பாடலை ரெக்கார்ட் செய்துகொண்டிருந்தேன். அப்போது எனது குருநாதர் ஜிகே வெங்கடேசன் அருகில் அன்னக்கிளி திரைப்படத்திற்கான கதையாசிரியர் செல்வராஜ் சென்றார். அவர், ‘அந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே அமோக வரவேற்பு பெற்றிருக்கின்றன’ என்று கூறினார். இதற்கு ஜிகே வெங்கடேசன், ‘இளையராஜா பாடல்களை நன்றாக அமைப்பார், ஆனால் அவர் பின்னணி இசையை சரியாக அமைக்க முடியாது’ என்று கூறிவிட்டார்.
அந்த நேரத்தில், அவர் இப்படிச் சொல்லிவிட்டாரே என்று நான் மனதிற்குள் ஒரு உறுதி கொண்டேன். அதாவது, நான் உதவியாளராக வேலை செய்தபோது, பின்னணி இசையை நானே அமைக்கக்கூடியவன். எனவே, நான் எதிர்காலத்தில் எனக்கு உதவியாளர்களை வைத்துக்கொள்ள கூடாது. எல்லாவற்றையும் நாமே செய்ய வேண்டும் என்று நான் முடிவெடுத்தேன்.நம் இசை கேவலமாக இருக்கிறது என்று யாராவது விமர்சித்தாலும், அந்த விமர்சனம் நம்மிடம் வந்திருக்கட்டும். அதேபோல், நல்லதாக இருக்கிறது என்று பாராட்டினாலும், அந்த புகழ் நம்மிடம் வந்திருக்கட்டும். எனவே, எந்தக் காரணத்திற்காகவும் யாரையும் உதவியாளராக வைத்துக்கொள்ளக் கூடாது என்று நான் தீர்மானித்தேன்,” என்று அவர் கூறினார்.