நடிகை நிம்ரத் கவுர் நடித்த ‘குல்’ என்ற வெப் தொடர் சமீபத்தில் வெளியாகியுள்ளது. இந்த தொடரில் நிம்ரத் கவுரின் நடிப்பிற்கு பெரும்பாலான பாராட்டுகள் கிடைத்து வருகின்றன. இந்த வெப் தொடருக்காக நடைபெற்ற புரமோஷன் நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அவர், “இந்த தொடரில், உடன் பிறந்தவர்களை பாதுகாப்பாக பார்த்துக்கொள்ளும் ஒரு பெண்ணின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன்.

நிஜ வாழ்க்கையிலும், என் தங்கை எனக்கு மிகவும் முக்கியமானவர். அவளை நான் எப்போதும் பாதுகாப்புடன் பார்த்துக்கொள்கிறேன். எனது அனுபவங்களைப் பகிர்ந்தாலும், அவளிடம் நான் விரும்பியதை கட்டாயமாக செய்ய சொல்வதில்லை. நான் சந்தித்த சிரமங்கள், போராட்டங்களை அவள் அனுபவிக்க வேண்டாம் என்பதற்காக எனது அனுபவங்களை அவளுடன் பகிர்ந்து கொள்கிறேன். என் தங்கை மிகவும் புத்திசாலி.
இப்பொழுது நான் ஒரு வெற்றிகரமான நடிகையாக வளர்ந்திருக்கின்றேன் என்பதில், என் பெற்றோர் பெரிதும் மகிழ்ச்சி அடைகின்றனர். அவர்கள் என்னை நினைத்து பெருமைப்படுகிறார்கள். ரசிகர்கள் என் அம்மாவுடன் புகைப்படங்கள் எடுத்து, என்னைப் பற்றியும் அவரிடம் கேட்கின்றனர். இதைப் பார்த்தபோது எனக்கு மிகவும் மகிழ்ச்சி ஏற்படுகிறது. எழுத்தாளர் அமிர்தா பிரிதமின் வாழ்க்கையை நான் திரைப்படமாக மாற்ற விரும்புகிறேன். அவருடைய வாழ்க்கை ஒரு சிறந்த திரைப்படமாக உருவாக்கப்படக்கூடியது. அவருடைய கதாபாத்திரத்தில் நான் நடிக்கத் தகுதியுடையவள் என்று நினைக்கிறேன். மக்களிடம் கொண்டு செல்லப்பட வேண்டிய ஒரு நல்ல கதையை நான் கண்டுபிடித்தால், அந்தப் படத்தை தயாரிக்க தயார்” என தெரிவித்தார்.