1989ஆம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில், இளையராஜா இசையமைப்பில், பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவில், நாகர்ஜுனா ஹீரோவாக நடித்த ‘கீதாஞ்சலி’ திரைப்படம், தெலுங்கில் வெளியானபோது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. அதைத்தொடர்ந்து தமிழிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வரவேற்பைப் பெற்ற இப்படம், தேசிய விருது மற்றும் மாநில விருதுகள் உள்பட பல விருதுகளை வென்றது. அந்தப் படத்தை எடுக்க மணிரத்னத்தை சம்மதிக்க வைத்த அனுபவத்தை, நாகர்ஜுனா சமீபத்திய ஒரு நேர்காணலில் பகிர்ந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியுள்ள, அந்த நேர்காணலில், நாகர்ஜுனா, என் தந்தைகாக மக்கள் என் படங்களைப் பார்க்கத் தொடங்கினர். அதை மாற்றவேண்டும் என்று நான் முடிவு செய்தேன். அப்போது ‘ஆகாரி போராட்டம்’, ‘மஜ்னு’ போன்ற படங்களில் நடித்தேன். அவற்றில், ‘மஜ்னு’ எனக்குப் பெரும் திருப்புமுனையாக அமைந்தது” என்று கூறியவர், பின்னர் ‘கீதாஞ்சலி’ பற்றிப் பேசத் தொடங்கினார்.
தினமும் காலை 6 மணிக்கு, மணிரத்னம் சார் அலுவலகத்தின் வெளியே நான் காத்திருப்பேன். இவ்வாறு தொடர்ந்து முயற்சி செய்ததில், ஒரு நாள் அவரை நான் சம்மதிக்க வைத்தேன். முதலில் அவர் அந்தக் கதையை தமிழில் எடுக்க விரும்பினார். ஆனால், அவரது மார்க்கெட் தெலுங்கிலும் வளரவேண்டும் என்பதற்காக, அந்தப்படத்தை தெலுங்கில் எடுக்க நான் பரிந்துரைத்தேன்” என்று நாகர்ஜுனா குறிப்பிட்டுள்ளார்.