தெலுங்குத் திரையுலகத்தின் மூத்த நடிகர்களில் ஒருவராக உள்ள சிரஞ்சீவி, 2008ஆம் ஆண்டில் ‘பிரஜா ராஜ்யம்’ என்ற அரசியல் கட்சியை தொடங்கினார். 2009ஆம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில் அவர் இரு தொகுதிகளில் போட்டியிட்டார். இதில் திருப்பதி தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்ற உறுப்பினராக ஆனார். பின்னர் 2011ஆம் ஆண்டில் தனது கட்சியை காங்கிரஸுடன் இணைத்தார். அதன்பின் 2012ஆம் ஆண்டு அவர் ராஜ்யசபா உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து மத்திய சுற்றுலாத் துறை இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் அந்தப் பொறுப்பில் செயல்பட்டார். 2014 முதல் அரசியலில் இருந்து மெல்ல ஒதுங்க ஆரம்பித்தார். பின்னர் 2017ஆம் ஆண்டு திரையில் மீண்டும் நடிக்க தொடங்கியதும் அரசியலை முற்றிலும் விலகினார்.

இந்த நிலையில் சமீபத்திய ஒரு நிகழ்ச்சியில் அவர் பேசும்போது, அரசியலில் இருந்து விலகிய பிறகும் சிலரால் விமர்சிக்கப்பட்டுவருவது குறித்து கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது: “நான் அரசியலில் இருந்து முழுமையாக விலகிவிட்டேன். ஆனால் சமூக வலைதளங்களில் சிலர் என்னை தவறாகவும் கடுமையாகவும் விமர்சிக்கின்றனர். இதற்கெல்லாம் பதிலளிக்க வேண்டும் என்ற அவசியத்தை நான் உணரவில்லை. நான் செய்த சமூக சேவைகளும், மக்களின் அன்பும், பாசமும் எனக்கு கவசமாக இருக்கின்றன. என் நற்காரியங்களைப்பற்றி நான் பேச தேவையில்லை; அவை தான் எனக்காகப் பேசும். சில அரசியல் தலைவர்களும் என்னை விமர்சித்து வருகின்றனர்.
ஒரு அரசியல்வாதி என்னை எதிர்த்து தேவையற்ற கருத்துக்களை வெளியிட்டார். பின்னர் அவர் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்றபோது, ஒரு பெண் அவரை உணர்ச்சி மிக்க முறையில் எதிர்கொண்டு, ‘நீங்கள் ஏன் சிரஞ்சீவியைப் பற்றித் தவறாகப் பேச வேண்டும்?’ என்று கேட்டார். அந்த வீடியோவைப் பார்த்த பிறகு அந்த அரசியல்வாதி குறித்து நான் அறிந்தேன்.
பல ஆண்டுகளுக்கு முன் என் ரத்த வங்கியின் மூலம் அந்த பெண்ணின் குழந்தை உயிர் பெற்றதாகவும், அதனால் தான் அவர் என்னை மதிக்கிறார் என்றும் அவர் கூறிய வார்த்தைகள் என் இதயத்தைத் தொட்டன. அந்த பெண் அந்த கேள்வியை எழுப்பிய பிறகு அந்த அரசியல்வாதி ஒருபோதும் என்னை விமர்சிக்கவில்லை. அரசியல்வாதிகளுக்கும் மனம் இருக்கிறது. ஒருவேளை அவர் கோபத்தில் அப்படி பேசியிருக்கலாம். ஆனால் வீட்டிற்குச் சென்றபின் அவருடைய மனைவியே கூட ‘இனி சிரஞ்சீவியைப் பற்றி அவ்வாறு பேச வேண்டாம்’ என்று கூறியிருக்கலாம்.நான் சமூக வலைதளங்களில் வரும் விமர்சனங்களுக்கு பதிலளிப்பதில்லை. ஏனெனில் என் செயல்கள், என் ரசிகர்களின் அன்பு எனக்கு ஒரு பாதுகாப்புக் கவசமாக இருக்கின்றன. என் செய்த நற்காரியங்களைப்பற்றி நான் பேசத் தேவையில்லை; அவை எனக்காகவே பேசும். அதுதான் உண்மை,” என அவர் தெரிவித்துள்ளார்.
1998ஆம் ஆண்டு சிரஞ்சீவி ‘சிரஞ்சீவி தொண்டு அறக்கட்டளை’ என்ற பெயரில் ஒரு அமைப்பை தொடங்கினார். இந்த அறக்கட்டளையின் முக்கிய நோக்கம், ‘ரத்தம் இல்லாமல் எந்த உயிரும் இழக்கப்படக் கூடாது’ என்பதே. இந்த அறக்கட்டளையின் கீழ் ரத்த வங்கி, கண் வங்கி ஆகியவை இயங்கி வருகின்றன. அமைப்பின் இணையதள தகவலின் படி, இதுவரை 9 லட்சம் யூனிட்டிற்கு மேற்பட்ட ரத்தம் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும், அதில் 79% ஏழை மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது. மேலும், 4,580 ஜோடி கண்கள் தானமாக பெறப்பட்டு, அதன் மூலம் 9,060 பார்வையற்றவர்கள் பார்வையைப் பெற்றுள்ளதாக அறக்கட்டளை தெரிவித்துள்ளது.