மாதவன் நடிப்பில் ‘மின்னலே’ படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் கவுதம் மேனன். இதைத் தொடர்ந்து 2003ல் சூர்யாவை வைத்து ‘காக்க காக்க’ படத்தை இயக்கினார். இந்த படம் சூர்யாவின் கேரியரில் மிக முக்கியமான படமாக திகழ்ந்தது. பின்னர் 2008ல் ‘வாரணம் ஆயிரம்’ என்ற படத்தையும் சூர்யா வைத்து கவுதம் மேனன் இயக்கினார். இதற்குப் பிறகு அவர்கள் இருவரும் மீண்டும் இணையவில்லை.
தற்போது கவுதம் மேனன், மலையாளத்தில் மம்முட்டி நடிப்பில்‘டோமினிக் அண்ட் தி லேடீஸ் பர்ஸ்’ படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் ஜனவரி 23ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. அடுத்ததாக விஷால்-ஐ வைத்து ஒரு படத்தை இயக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நேரத்தில், கவுதம் மேனன் அளித்த பேட்டியில், ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ படங்களுக்கு பிறகு சூர்யாவுடன் மீண்டும் இணையாததற்கான காரணம் பற்றி கேட்கப்பட்டபோது, அவர் கூறியது, “துருவ நட்சத்திரம் படத்தின் கதையை முதலில் சூர்யாவிடம் சொன்னேன். ஆனால், அந்த கதையில் அவர் நடிக்க மறுத்துவிட்டார். இதன் காரணமாகவே நாங்கள் மீண்டும் இணையவில்லை.
அவரை வைத்து ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’ என்ற இரண்டு வெற்றி படங்களை கொடுத்திருக்கிறேன். அதற்காகவாவது அவர் என்னை நம்பி இருக்கலாம். ஆனால், அவர் துருவ நட்சத்திரம் படத்தில் நடிக்க மறுத்தது எனக்கு மிகுந்த வருத்தத்தை அளித்தது” என்றார் கவுதம் மேனன்.