மலையாள நடிகை கிரேஸ் ஆண்டனி, இயக்குநர் ராம் இயக்கிய ‘பறந்து போ’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரைப்பட உலகில் தனது நடிப்புப் பயணத்தை தொடங்கியுள்ளார். இப்படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி அவர் பேசுகையில், “ராம் சார் என்னை இப்படத்தில் நடிக்க அழைத்தபோது, அவரை பற்றி நான் அதிகமாக அறிந்திருக்கவில்லை. ஆனால், அவருடைய ‘பேரன்பு’ திரைப்படம் எனக்கு மிகவும் பிடித்த படம். அவரது கதை ஒன்றில் நடித்ததன் மூலம் பலவற்றை நான் கற்றுக்கொண்டேன்” என்றார்.அஞ்சலியுடன் இணைந்து நடித்த அனுபவம் தன்னை மிகுந்த மகிழ்ச்சியடையச் செய்ததாகவும் கிரேஸ் ஆண்டனி தெரிவித்தார்.

“ராம் சார் என்மீது மிகுந்த நம்பிக்கையுடன் என்னை இப்படத்தில் நடிக்க வைத்தார். அவர் வைத்திருந்த நம்பிக்கையை நான் காப்பாற்றி இருக்கிறேன் என நம்புகிறேன். நான் நடித்த ‘நுன்னக்குழி’ மலையாள படத்திற்கு கிடைத்த வரவேற்பு மூலமாக தமிழ்ப் பார்வையாளர்களும் எனது மேல் அன்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்” என கூறினார்.
மலையாள திரைப்படங்களில் பெரும்பாலும் நகைச்சுவை வேடங்களில் நடித்திருந்தாலும், ஒரே மாதிரியான கதாபாத்திரங்களில் மாட்டிக்கொள்ள விருப்பமில்லை என்று அவர் கூறினார். அதனால், அனைத்து வகையான கதாபாத்திரங்களிலும் நடிக்கவேண்டும் என்ற ஆவலுடன் இருக்கிறேன் என்றார். ‘பறந்து போ’ திரைப்படத்திலும் பல பரிமாணங்களை உள்ளடக்கிய கதாபாத்திரத்தில் நடித்தேன். இதில் நகைச்சுவை மட்டுமல்லாமல் உணர்வுப்பூர்வமான காட்சிகளும் இருக்கின்றன எனவும் குறிப்பிட்டார்.
இந்த உணர்ச்சிவசப்படுத்தும் நடிப்பை வெளிக்கொணரச் செய்தது ராம் சார் தான் என்பதையும் அவர் குறிப்பிட்டார். “அவர் என கால் ஷீட்டுக்காக, காத்திருந்து இப்படத்தின் படப்பிடிப்பை திட்டமிட்டார். நம்முடைய வீட்டுப் பக்கத்தில் வசிக்கிற ஒருவர் எப்படிச் சீராகவும் எளிமையாகவும் வாழ்கிறாரோ, அதுபோன்ற குடும்பத்தின் கதையையே இப்படம் சொல்லுகிறது” என்றும் கிரேஸ் ஆண்டனி தெரிவித்தார்.