மலையாளத் திரையுலகில் சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக மோகன்லாலும், மம்முட்டியும் முன்னணி நடிகர்களாகவும், போட்டியாளர்களாகவும் வலம் வருகின்றனர். இருப்பினும், அவர்களது படங்களுக்கு இடையே மட்டுமே போட்டி இருந்தாலும், இருவரும் மிக நெருங்கிய நட்பை பல ஆண்டுகளாக பேணி வருகின்றனர். பொது இடங்களில் தங்கள் நட்பையும், அன்பையும் வெளிப்படுத்துவதில் ரசிகர்களுக்கு காட்டுவதில் இருவரும் ஒருபோதும் தவறியதில்லை. அந்த வகையில், சமீபத்தில் மோகன்லால் தனது ‘எம்புரான்’ படம் விரைவில் வெளியாகவுள்ளதை முன்னிட்டு சபரிமலைக்கு தரிசனத்திற்கு சென்றிருந்தார்.

அப்போது, மம்முட்டியின் உண்மையான பெயரான முகமது குட்டி பெயரில் அவர் அர்ச்சனை செய்ததாக தகவல் பரவியது. இதை மோகன்லால் ரசிகர்கள் மட்டுமல்ல, மம்முட்டி ரசிகர்களும் நெகிழ்ந்து அவரது செயலை பாராட்டினர். ஆனால், சமீபத்தில் மோகன்லாலிடம் இதுபற்றி கேட்டபோது, “பிரார்த்தனையை வெளியில் சொல்லக்கூடாது” என்று கூறினார்.
“மம்முட்டிக்காக நான் செய்த பிரார்த்தனை என் தனிப்பட்ட விஷயம். அதை நான் ஏன் வெளியில் சொல்ல வேண்டும்? நான் அவருக்காக அர்ச்சனை செய்து சீட்டுக்கு பணம் கட்டியது, கோவில் நிர்வாகத்தில் இருந்த யாரோ ஒருவர் மூலம் ஊடகங்களுக்கு தெரிந்துவிட்டது. இல்லையென்றால், இது என்னுடன் மட்டுமே இருந்திருக்கும். எல்லோரையும் போல மம்முட்டிக்கு ஒரு சிறிய பிரச்னை இருந்தது. இப்போது அவர் நல்ல நிலையில் உள்ளார். கவலைப்பட ஏதுமில்லை” என்று அவர் வெளிப்படையாக பதிலளித்தார்.