‘சித்தா’ பட இயக்குநர் அருண் குமார் இயக்கத்தில், விக்ரம் தனது 62-வது படமாக ‘வீர தீர சூரன்’ திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில், எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு, ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.
மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர், சில மாதங்களுக்கு முன்பு வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது. விவேக் வரிகளில், ஹரிசரண் மற்றும் ஷ்வேதா மோகன் இணைந்து பாடிய படத்தின் முதல் பாடல் ‘கல்லூரும்’, லிரிக் வீடியோவாக வெளியானது. இது ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.‘வீர தீர சூரன்’ திரைப்படம் மார்ச் 27-ஆம் தேதி வெளியாகவுள்ளது. இதற்கான டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா, மார்ச் 20-ஆம் தேதி மாலை 7 மணிக்கு, வேல் டெக் பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ளது.
படக்குழு தற்போது ப்ரோமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு நேர்காணலில், எஸ்.ஜே. சூர்யா, படத்தைப் பற்றிய சில சுவாரசிய தகவல்களை பகிர்ந்தார். அதில், வீர தீர சூரன்’ ஒரு Raw மற்றும் மிகுந்த இண்டென்ஸ் படமாக இருக்கும். இதில் உள்ள அனைத்து கதாபாத்திரங்களும் சிறிய அளவிலாவது வில்லத்தன்மை கொண்டவர்களாகவே இருப்பார்கள். ஆனால், அவர்களுக்கு தங்களது சொந்த நியாயங்கள் இருக்கும். இயக்குநர் அருண் குமார், மிகப்பெரிய ஹாலிவுட் இயக்குநரான மார்டின் ஸ்கார்சேசியின் ரசிகர். அதனால், மார்டின் ஸ்கார்சேசி ஒரு கிராமப்புற பின்னணியில் படம் எடுத்தால் எப்படி இருக்கும் என்பதுபோல இந்தப் படம் இருக்கும் என அவர் கூறியுள்ளார். இந்த தகவல் வெளியாகியதும், திரைப்பட ரசிகர்கள் படத்தின் வெளியீட்டுக்காக ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.