விக்ரம் நடித்துள்ள ‘வீர தீர சூரன்’ திரைப்படம் இந்த மாதம் 27-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘சித்தா’ படத்தின் வெற்றிக்குப் பிறகு, இந்த படத்தை இயக்குநர் S.U. அருண்குமார் இயக்கியிருக்கிறார். இந்நிலையில் இப்படம் குறித்து படக்குழு சமீபத்தில் பேட்டி ஒன்றை அளித்திருந்தார்கள்.
நடிகர் விக்ரம் பேசுகையில், விக்ரம், “எஸ்.ஜே. சூர்யா ஒவ்வொரு படத்திலும் கலக்கிக் கொண்டிருக்கிறார். இந்தப் படத்தில் அவர் நடிக்கவில்லை என்று சொல்லுகிறார், ஆனால் அவர் மிக முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். ஒவ்வொரு காட்சியிலும், ஒவ்வொரு வசனத்திலும், ஒவ்வொரு வார்த்தையிலும் அவர் அற்புதமாக நடித்திருக்கிறார். நான் அவருடைய மிகப்பெரிய ரசிகன்.

நடிப்புக்கு மட்டுமல்ல, டப்பிங்கிற்கும் அவர் ஒரு மான்ஸ்டர். அவர் செய்யும் விஷயங்களும் மான்ஸ்டர் மாதிரியே இருக்கும். இந்தப் படத்தில் சுராஜ் வெஞ்சாரமூடுவின் சேர்க்கை எங்களுக்குப் பெரிய உற்சாகம் அளித்தது. படம் மிகவும் இயல்பாக (Raw) இருக்கும் என்பதால், அனைவரும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று முன்பே திட்டமிட்டிருந்தோம்.
முக்கியமாக, எஸ்.ஜே. சூர்யாவின் நடிப்பு எங்களுக்கு பெரிய வரமாக இருந்தது. இந்தப் படத்தில் உள்ள ஒவ்வொரு கதாபாத்திரமும் கிரே ஷேட்களாகவே இருக்கும். எல்லோருக்கும் ஒரு நியாயம் இருக்கும். இவர்கள் நல்லவர்கள், கெட்டவர்கள் என்று வேறுபாடு இருக்காது. துஷாரா விஜயன் தவிர, நாங்கள் அனைவரும் ஒரு கட்டத்தில் சுயநலமாகவே நடந்து கொள்கிறோம்,” என்றார்.தொடர்ந்து சுராஜ் வெஞ்சாரமூடு, “என் வாழ்க்கையில் முதல் முறையாக புகைப்படம் எடுத்த நடிகர் விக்ரம் சார்தான். ‘மஜா’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நேரத்தில், நான் என் மனைவியுடன் சேர்ந்து அவருடன் புகைப்படம் எடுத்திருந்தேன்.
அதன் பிறகு, சில வருடங்கள் கழித்து, சிங்கப்பூரில் ஒரு மாலில் இருந்தபோது, விமானம் செல்ல நேரமாகி விட்டதால் விரைவாக கிளம்பிக்கொண்டு இருந்தேன். அப்போது ஒருவரால், ‘சார், நான் உங்களுடைய மிகப்பெரிய ரசிகன். ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்ளலாமா?’ என்று கேட்டார். திரும்பி பார்த்தபோது, அது விக்ரம் சாராக இருந்தார்!”இதையடுத்து சிரித்துக்கொண்டே, “விக்ரம் சாருக்கு மேக்கப் மேன் பாம்பேயில் இருந்து வந்திருக்கிறார். ஆனால், எனக்கு மட்டும் அல்ல, அனைவருக்கும் விக்ரம் சாரே மேக்கப் மேன்! நடிகர்களின் தோற்றத்தை எப்படி பராமரிக்க வேண்டும் என்பதில் அவர் தனி கவனம் செலுத்துவார்,” என்றார்.