சமீபத்தில் ஷார்ஜாவில் 43வது சார்ஜா சர்வதேச புத்தகத் திருவிழா கொண்டாடப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினராக இசைஞானி இளையராஜா கலந்து கொண்டார். இந்த நிகழ்வில் ‛ஒரு இசை ஜாம்பவானின் பயணம்; இளையராஜாவின் இசைப்பயணம்’ எனும் தலைப்பில் அங்கே வந்திருந்த ரசிகர்களுடன் இளையராஜா கலந்துரையாடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய இளையராஜா, ரசிகர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார். அப்போது ஒருவர் ‛நீங்கள் ஏன் அதிகமாக மலையாள படங்களுக்கு இசையமைப்பதில்லை?’ என்று கேட்டார். அதற்கு இளையராஜா அளித்த பதில் மிகவும் புதுமையானதுடன் வித்தியாசமாகவும் இருந்தது.
அதன் பின்னர் அவர், “எனக்கும் மலையாள படங்களுக்கு இசையமைக்க ஆசைதான். ஆனால் மலையாள திரையுலகை பொறுத்தவரை நிறைய இசையமைப்பாளர் இருக்கிறார்கள். அவர்கள் அங்கே இசையை உருவாக்க துவங்கி விட்டனர். ஒருவேளை இதனால் தான் என்னை மலையாள திரையுலகினர் அழைக்கவில்லையோ என்னவோ..? என்றாலும், இப்போதும் மலையாள படங்களுக்கு இசையமைக்க அழைத்தால் நான் தயார்” என்றார்.
இளையராஜா 1978ல் ‛வியாமோகம்’ படத்தின் மூலம் மலையாள திரையுலகில் அறிமுகமானார். அதன் பிறகு ‛யாத்ரா’ மற்றும் ‛மை டியர் குட்டிச்சாத்தான்’ போன்ற படங்களுக்கு இசையமைத்தார். எனினும், அதன் பிறகு அவர் தமிழில் அதிக வேலைப்பளுவால் மலையாளத்தில் தொடர்ந்து பணியாற்ற முடியவில்லை. அதே நேரத்தில் மலையாள படங்களில் அவரது தமிழ் பட பாடல்கள் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டு வருகின்றன. சமீபத்திய உதாரணமாக ‘மஞ்சும்மேல் பாய்ஸ்’ படத்தில் இடம்பெற்ற அவரது ‘கண்மணி அன்போடு’ பாடலின் வெற்றியும் குறிப்பிடத்தக்கது.