இயக்குனர் ராஜவேல் இயக்கத்தில் தர்ஷன், காளி வெங்கட், ஆர்ஷா பைஜூ ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கும் திரைப்படம் “ஹவுஸ்மேட்ஸ்”. இந்த படம் ஆகஸ்ட் 1ம் தேதி திரைக்கு வரவுள்ளது. சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் விழாவில் நடிகர் தர்ஷன் பேசுகையில், “இதுபோன்ற கதையம்சம் கொண்ட படத்தில் நடிப்பது எனது நீண்ட நாள் ஆசையாக இருந்தது. என்னை நம்பி இந்த வேடத்தை கொடுத்த படக்குழுவுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துக்கொள்கிறேன்.

டிரெய்லரை பார்த்த சிலர் ‘இது ஒரு திகில் படம் போல தோன்றுகிறது’ எனக் கூறுகிறார்கள். ஆனால் இது அதையும் தாண்டி, நம்மால் எதிர்பார்க்க முடியாத திருப்பங்களையும் ஆச்சரியங்களையும் கொண்ட குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவாகியுள்ளது. ரசிகர்கள் மீது வைத்துள்ள நம்பிக்கையோடு இந்தப் படத்தில் நடித்தேன். அவர்களிடமிருந்து ஆதரவை எதிர்நோக்கியுள்ளேன்” என்று தெரிவித்துள்ளார்.
இதே நிகழ்வில் கதாநாயகி ஆர்ஷா பைஜூ கூறுகையில், “நான் இதுவரை நடித்த படங்களில் மிகவும் பிடித்த நடிகர் தர்ஷன்தான். இந்த படத்தின் போது, எனக்கு எழுந்த சந்தேகங்களைத் தீர்த்ததோடு, தமிழ் பேசுவதில் ஏற்பட்ட தடைகளை அவர் சமாளிக்க உதவினார். அவருடைய உதவியை நான் மறக்க முடியாது” என்று கூறினார். அதேபோன்று நடிகர் காளி வெங்கட், “இந்த படத்தில் பல சஸ்பென்ஸ் முறைகள் உள்ளன. ரசிகர்களுக்காக ஒரு சிறந்த விருந்தாக இருக்கப்போகிறது” என தெரிவித்தார்.