கன்னியாகுமரியில் தனது பெற்றோரை இழந்த சிறு வயது அருண் விஜய், அதே அனுபவத்தைச் சந்தித்த சிறுமி ஒருவரை தனது தங்கையாக வளர்க்கிறார். இருவரும் பாசத்துடன் அண்ணன்-தங்கையாக இருக்கின்றனர். அருண் விஜய் பேச முடியாதவராகவும், காதும் கேட்காதவராகவும் இருக்கிறார். கடுமையான கோபக்காரராக இருக்கும் அவர், தனது எதிரில் தவறு நடந்தால் உடனே அசைவின்றி நடவடிக்கை எடுக்கிறார். குடும்ப நண்பரான பாதிரியார், அவரை ஆதரவற்றோர் இல்லத்தில் வேலைக்குச் சேர்க்கிறார்.
அந்த இல்லத்தில் பார்வையற்ற பெண்கள் சிலர் குளித்ததை மூன்று பேர் திருட்டுத்தனமாகப் பார்த்து ரசிக்கிறார்கள். இதை கண்ட அருண் விஜய், அவர்களில் இருவரை கொடூரமாகக் கொன்றுவிடுகிறார். பின்னர் அவர் நேரடியாக போலீசில் சரணடைகிறார், ஆனால் கொலை செய்ததற்கான காரணத்தை சொல்ல மறுக்கிறார். ஜாமீனில் வெளியே வந்த பிறகு, “மற்றொருவரையும் கொல்வேன்” என்று தெரிவிக்கிறார். இதனால் அருண் விஜய் ஏன் கொலை செய்தார் என்பதைக் கண்டறிய போலீசார் முயற்சி செய்கிறார்கள். அதன் முடிவு என்னவென்று தெரிந்து கொள்வதே படத்தின் மீதிக் கதை.
பாலா இயக்கத்தில் விக்ரம் மற்றும் சூர்யா நடித்த ‘பிதாமகன்’ படத்தில் விக்ரம் ஏற்று நடித்த சித்தன் கதாபாத்திரத்தை, பாலா தற்போது அருண் விஜய் நடிக்கும் கோட்டி கதாபாத்திரமாக புதுப்பித்துள்ளார். 20 ஆண்டுகள் கடந்துள்ள நிலையில், இன்றைய தலைமுறைக்கு இது புதியதாக இருக்கட்டும் என்று நினைத்தாரோ என்னமோ, அந்த கதாபாத்திரத்தை மாறாமல் கொண்டுவந்துள்ளார். அருண் விஜய், அந்த கோட்டி கதாபாத்திரத்தில் உயிரோட்டமாக நடித்துள்ளார். இந்த படம் வியாபார ரீதியாக வெற்றி பெறுகிறதோ இல்லையோ, அருண் விஜய்யின் சிறந்த நடிப்பை வெளிப்படுத்திய படமாக அமைந்துள்ளது.
பாலா தனது படங்களில் நடிக்கத் தெரிந்த நடிகையரைக் கண்டுபிடிக்கிறாரா அல்லது அவர்களிடம் அப்படி நடிக்கச் செய்கிறாரா என்கிற விவாதத்துக்கு ஒரு பட்டிமன்றம் நடத்தலாம். அருண் விஜய்யை காதலிக்கும் ரோஷினி பிரகாஷ் தனது துறுதுறுப்பான நடிப்பால் “இவர் யார்?” என்று கேட்கவைக்கிறார்.
‘பிதாமகன்’ படத்தில் லைலா நடித்த மஞ்சு கதாபாத்திரத்தை பார்த்த உணர்வை மீண்டும் அனுபவிக்க வைத்துள்ளார். அருண் விஜய்யின் தங்கையாக நடிக்கும் ரிதா கதாபாத்திரம் மிகச் சிறப்பானதாக அமைந்துள்ளது. தான் வளர்ப்பு தங்கை என்பதை அறிந்தபின் அவர் கதறி அழும் நடிப்பு மனதை உருக வைத்துவிடுகிறது. ஆனால், அந்த கதாபாத்திரத்திற்கு முடிவாக கொடுக்கப்பட்ட செயற்கையான சினிமாத்தனமான தீர்வு மட்டும் சிறிது குறையாக தோன்றுகிறது. இதைக் கழித்துப் பார்க்கும்போது, “வணங்கான்” திரைப்படம் பொங்கல் வின்னராக திகழும் என சொல்லலாம்.