சமீபத்தில் நடைபெற்ற மதகஜராஜா படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் விஷால், அப்போது கை நடுக்கம் மற்றும் கண் பார்வை பிரச்சினைகளால் சர்ச்சையை ஏற்படுத்தினார். விஷாலின் கை நடுக்கத்துடன் பேசும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி, அவரது ரசிகர்களை சோகமடையச் செய்தது. இதனைப் பார்த்த பலரும் விஷால் பழைய நிலைக்கு திரும்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்து வருகின்றனர்.
இந்த சூழலில், தனது காதலிக்க நேரமில்லை படத்தின் விளம்பர நிகழ்ச்சியில் நடிகர் ஜெயம் ரவி விஷாலை பற்றி நெகிழ்ச்சியுடன் கருத்து தெரிவித்தார். அவர் கூறியதாவது, என் நண்பன் விஷாலை விட தைரியசாலி யாரும் இல்லை. இப்போது அவர் ஒரு கடினமான கட்டத்தில் இருக்கிறார். ஆனால் அவரது தைரியம் அவரை மீட்கும். கூடிய சீக்கிரமே அவர் திரும்பி வருவார். அவரது நல்ல மனமும் அவரது குடும்பத்தின் ஆதரவால் அவன் சிங்கம் போல மீண்டும் எழுந்து வருவான் என்றுள்ளார்.
காதலிக்க நேரமில்லை திரைப்படம் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் உருவாகியிருக்கிறது. இதில் ஜெயம் ரவி, நித்யா மேனன் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். யோகிபாபு, வினய், ஜான் கொக்கன், லட்சுமி ராமகிருஷ்ணன், வினோதினி உள்ளிட்ட பலரும் நடித்துள்ள இப்படத்திற்கு ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார். ரெட் ஜெயன்ட் நிறுவனம் தயாரித்துள்ள இத்திரைப்படம் ஜனவரி 14 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.